- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் வெளியான தியேட்டரில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம்… தெலங்கானா அரசுக்கு மனித உரிமைகள்...

புஷ்பா 2 படம் வெளியான தியேட்டரில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம்… தெலங்கானா அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியானது. இந்த படம் மொத்தம் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இன்னும் சில ஆண்டுகளில் புஷ்பா 3 படம் உருவாக உள்ளது.

கடந்த ஆண்டில் புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முந்தைய நாள் டிசம்பர் 4ம் தேதியன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் காட்சி நடந்தது. அந்த பிரிமியர் காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜூனும் வந்திருந்தார். அப்போது ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

- Advertisement -

அவருடன் வந்திருந்த அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் கூட்ட நெரிசல் சிக்கி படுகாயம் அடைந்தார். பிறகு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதேஜ் சில மாதங்கள் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சந்தியா தியேட்டர் நிர்வாகத்தினரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில முதன்மைச் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. இது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது, புஷ்பா 2 படத்தின் பிரிமியர் காட்சிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதியின்றி நடிகரும் பார்வையாளர்களும் எப்படி அங்கு கலந்து கொண்டார்கள்? முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்து இருக்கலாம். விசாரணை முழுமையாகவும் பாரபட்சம் இன்றியும் நடத்தப்பட வேண்டும்.

நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டிய காரணம் என்ன? 6 வாரங்களுக்குள் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அதில் உத்தரவிட்டுள்ளது. நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் தரப்பில் 1 கோடி ரூபாய், படத்தின் இயக்குனர் சுகுமார் தரப்பில் 50 லட்சம் ரூபாய், தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்