தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தினார் என்றால் அது மிகையல்ல. ஆனால் இடையில் அவர் சில விவகாரங்களால் 10 ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் வடிவேலுவுக்கு முன்பு போல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதனால் அவர் காமெடி ரோலில் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
குறிப்பாக கத்தி சண்டை சிவலிங்கா நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சந்திரமுகி 2 எலி சமீபத்தில் சுந்தா் சி இயக்கத்தில் வெளியான கேங்கர்ஸ் படம் உட்பட எந்த படத்திலும் நடிகர் வடிவேலுவின் காமெடி நடிப்பு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதே நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலுடன் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு குணச்சித்திர நடிப்பில் அழுத்தமான கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் நடிகர் பகத் பாசிலுடன் நடிகர் வடிவேலு இணைந்து நடித்த மாரீசன் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் பகத் பாசிலும் வடிவேலுவும் படம் முழுவதும் இணைந்து நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுஜித் சங்கர் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற போதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் மாரீசன் படம் குறித்து தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது, வடிவேலு அவர்களின் திரை வெளிப்பாடு படத்துக்கு ஆழத்தையும் பலத்தையும் கொடுத்திருக்கிறது. அவர் உடைந்து உருகும் அந்த தருணம் ஆகா அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை காட்டிவிட்டார். பகத் பாசில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை கொடுத்துள்ளார். இயக்குனர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் என்று இயக்குனர் ஷங்கர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ம் பாகம் உருவாக்க திட்டமிட்டபோது நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதனால் நடிகர் வடிவேலு பொதுவெளியில் இயக்குனர் ஷங்கரை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இயக்குனர் ஷங்கர் மாரீசன் படத்தில் வடிவேலுவின் நடிப்பை வெளிப்படையாக பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





