தமிழ் சினிமாவில் அழகிய நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகையாக அவர் இருக்கிறார். கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார்.
இதே படம் ரீமேக் செய்யப்பட்டு சிவா மனசுல ஸ்ருதி என்று 2012ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் வெளியானது. அந்த படத்தில் நாயகியாக நடித்த ரெஜினா கசாண்ட்ராவுக்கு சைமாவின் அறிமுக நடிகை விருது கிடைத்தது. 1990ம் ஆண்டில் சென்னையில் பிறந்த ரெஜினாவின் தாய்மொழி தமிழாகும். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்துவக் கல்லூரியில் உளவியல் இளங்கலை பட்டம் பெற்றவர்.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் இவர் நடித்திருந்தார். பின்னர் 2012 ம் ஆண்டில் அதே பெயரில் குறும்படம் முழு படமாக வெளியானது. பிரசன்னா லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற படம் 2005ம் ஆண்டில் வெளியானது. இதில் லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் ரெஜினா நடித்திருந்தார்.
மேலும் அழகிய அசுரா என்ற படத்தில் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி உடன் இணைந்து நாயகியாக நடித்தார். தொடர்ந்து கன்னடத்தில் சூரியகாந்தி என்ற படத்திலும் இவர் நடித்தார். குறிப்பாக தமிழில் 2013ம் ஆண்டில் விமல் சிவகார்த்திகேயன் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருந்தார். இந்த படத்தில் பெரிய அளவில் அவர் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
அதே ஆண்டில் ரெஜினா நடித்த நிர்ணயம் என்ற படமும் பலரது கவனத்தை ஈர்த்தது. இப்போது ரெஜினா கசாண்ட்ரா, அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
ஒரு நேர்காணலில் ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது, நான் பிறக்கும்போது முஸ்லிமாக தான் பிறந்தேன். என் வாழ்க்கையின் முதல் 6 ஆண்டுகள் எனது பெயர் வேறு. எங்க அம்மா ஒரு கிறிஸ்டின். எங்க அம்மா அப்பாவுக்கும் விவாகரத்தானது. எங்க அம்மா நான் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு இஸ்லாம் தெரியாது. அவங்க கிறிஸ்டின் என்பதால் நானும் கிறிஸ்டின் மதத்தை பின்பற்றலாம் என்று சொன்னார். அதற்கு பிறகுதான் நான் ஞானஸ்தானம் பெற்றேன். பைபிள் படித்தேன் அதற்குப் பிறகு என்னுடைய பெயரை ரெஜினா கசாண்ட்ரா என்று மாற்றிக் கொண்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.





