சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். அமீர்கான் நாகர்ஜுனா உபேந்திரா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ரஜினி திரைப்படத்தின் ரிலீஸ் என்றாலே அது திரையரங்குகளில் திருவிழாவாக நடைபெறும் என்ற கூற்றை இந்த கூலி திரைப்படமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் கூலி திரைப்படத்தின் முன்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று இதுவரை செய்யாத சாதனையை படைத்தது. இதேபோன்று தமிழ்நாடு கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முன்பதிவு ஜோராக நடைபெற்றது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கு படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஒவ்வொரு திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட, பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழக்கத்துடன் கொண்டாட்டம் களைகட்டியது.
திரையரங்குகள் முன்பு ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி மகிழ்ந்தனர். ஒன்பது மணி காட்சிக்கு காலை ஆறு மணிக்கே கூடிய ரசிகர்கள், ரஜினியின் பாடலுக்கு நடனம் ஆடினர். வெகுஜன மக்களைத் தாண்டி முக்கியமான பிரபலங்களும் கூலி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தனர். இதில் நடிகர் தனுஷ், சென்னை ரோகினி திரையரங்கில் கூலி திரைப்படத்தை கண்டு களித்தார்.
இதே போல லோகேஷ் கனகராஜ், குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்றார். இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோரும் கூலி திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்தனர். சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் திரையரங்கில் கூலி திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தார்.
இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய படமாகதான் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





