தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். 150 படங்களுக்கு மேல் அவர் நாயகனாக நடித்திருக்கிறார். எனினும் அவர் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் படம், அவரது படங்களிலேயே இன்று வரை கிரீடமாக இருந்து வருகிறது. அதே போல் ஊமை விழிகள் புலன் விசாரணை செந்தூரப்பூவே சின்னக்கவுண்டர் போன்ற படங்களும் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களாகும்.
ரஜினிகாந்த் கமல்ஹாசன் பிரபு சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அவர்களது 100வது படம் தோல்வி படமாக அமைந்த நிலையில், நடிகர் விஜயகாந்துக்கு மட்டுமே அவர் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன் மாஸ் ஹிட் படமாக இருந்தது. இன்று வரை அந்த படம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கிறது.
இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் கேப்டன் பிரபாகரன் கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் இந்த படம் வெளியானது. இதில் ரூபிணி ரம்யா கிருஷ்ணன் சரத்குமார் லிவிங்ஸ்டன் வடிவுக்கரசி பீலிசிவம் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.
இப்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டன் பிரபாகரன் படம் வருகிற 22ம் தேதி புதுப்பொலிவுடன் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை கொண்டாட்டமாக வரவேற்க கேப்டன் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர் முருகதாஸூம் பங்கேற்றார்.
அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த விழாவில் பேசியதாவது, கேப்டன் பிரபாகரன் படம் கள்ளக்குறிச்சியில் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து 10 நாட்கள் நான் படம் பார்த்தேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் 19 நிமிடங்களுக்கு பிறகுதான் கேப்டன் வருவார். அது என்னை மிகவும் ஈர்த்தது. இந்த இன்ஸ்பிரேஷன்தான் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்து இருக்கும்.
துப்பாக்கி படத்தில் பஸ் பிளாஸ்ட் காட்சியில் கதை தொடங்கிவிடும். அதற்கு இன்ஸ்பிரேஷன் இந்தப் படம் தான். ஒரு படத்தில் வில்லன் இறந்த பிறகு படத்தில் கதை இருக்காது. ஆனால் இந்த படத்தில் இருக்கும். அதுதான் எனக்கு ரமணா படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜயகாந்த் சாரை வைத்து படம் எடுப்பது எனக்கு கனவு. அது ரமணா படத்தில் நடந்தது. அதுபோல் அவர்தான் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். கேப்டன் பிரபாகரன் படத்தை ரசிகனாக பார்த்து, இன்று அந்த படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் அதே இயக்குனருடன் அமர்ந்திருப்பது எனக்கு கனவு போல இருக்கிறது என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





