தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் இளையராஜா இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இன்னும் அந்த பாடல்கள் தேனில் விழுந்த பலாச்சுளையாக இனிக்கின்றன. ஆனால் 6 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் தமிழ் சினிமாவில் இணைந்து பணியாற்றிய நிலையில், பிறகு மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதுவரை இருவரும் மீண்டும் ஒன்று சேரவே இல்லை.
இந்நிலையில் சென்னையில் கமாண்டோவின் லவ் ஸ்டோரி பட விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் கலந்து கொண்டார். அந்த விழாவில் கங்கை அமரன் பேசியதாவது, பொதுவாக கமல்ஹாசன் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது.
நடிகர் கமலை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசையை பார்த்தபிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார் என்று இந்த விழாவில் மேடையிலேயே அந்த படத்தின் இயக்குனர் அரவிந்தராஜிடம் கூறினேன்.
நானும் இப்போது ஒரு புதிய தகவல் சொல்கிறேன். ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான்தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமல்ஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது என யோசிக்கிறேன். இப்போது நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்.
ஒரு காலத்தில் 10 ஆண்டுகள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் வைரமுத்து பேசும்போதெல்லாம் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம்; என் பாடலே காரணம் என்று கூறி வந்தார். இதை கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும் அவர் நம்பவில்லை.
அதன்பின்னர் ஆதாரபூர்வமாக அவரே அதை அறிந்து கொண்டார். அப்புறம்தான் இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்துவிற்கும் விரிசல் ஏற்படக் முக்கிய காரணமே இளையராஜா என்னால்தான் வளர்கிறார் என்று வைரமுத்து மேடைகளில் பேசியதுதான் என்றார். இசையமைப்பாளர் கங்கை அமரன் இந்த விழாவில் இளையராஜா – வைரமுத்து மோதல் குறித்து பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





