தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ராயன் திரைப்படம் தனுஷின் ஐம்பதாவது காவியமாக உருவாக அதை அவரே இயக்கி நடித்து இருந்தார். இதுவும் கலவையான விமர்சனத்தைதான் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்காமல் ஓடியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் தனுஷிற்கு குபேரா திரைப்படம் வெளியானது. நேரடி தெலுங்கு படமாக எடுக்கப்பட்ட இது தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இது பார்ப்பதற்கு டப்பிங் படம் போன்றே இருப்பதாக பலரும் கூறினர். சேகர் கமுலா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் தமிழில் படுதோல்வி அடைந்த நிலையில், தெலுங்கில் வெற்றி பெற்றது. அங்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த உத்வேகத்துடன் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் தனுஷ். இதில் அவர் இட்லி கடை திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இது தனுஷின் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க தேனி சுற்று வட்டார பகுதிகளில் இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதில் தனுஷின் மனைவியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். ராஜ்கிரணுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கிராமத்து வாழ்வியலையும் அதேசமயம் குத்துச்சண்டையை மையப்படுத்தியும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் படத்தில் அருண் விஜய் நடித்திருப்பது தான். குத்துச்சண்டை வீரராக அவர் வருகிறார். இதைக் கேள்விப்பட்டதும் கதையை எந்த அளவுக்கு தனுஷ் கொண்டு சேர்த்திருப்பார் என்று கேள்வி இப்போதே எழுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படியான சூழலில் படத்திலிருந்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இட்லி கடையில் தனுஷின் தங்கையாக ஷாலினி பாண்டே நடித்து இருக்கிறாராம். அவரது கணவராகதான் வருகிறாராம் அருண் விஜய். இப்படி உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் ஒருவேளை இது, ரவி மோகன் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தை போன்று இருக்குமோ என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.





