சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது தெலுங்கில் சார் என்னும் பெயரில் வெளியானது. தமிழில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற தெலுங்கு மொழியில் ஓரளவு ஹிட் அடித்தது. அண்மையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்தது.
இதில் வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை, ஜிவி பிரகாஷ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் வெங்கி அட்லூரி. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
குடும்பத்தை தோளில் சுமக்கும் ஒரு நடுத்தர இளைஞன் எப்படி முறைகேடு செய்து பணத்தை சம்பாதிக்கிறான், அதில் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்புகிறான் என்பதை மிக சுவாரசியமாக கூறியிருந்தார் வெங்கி அட்லூரி. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, எந்தப் பக்கமும் நம்மை திரும்ப வைக்காமல் வைத்திருந்த திரைக்கதை என அனைத்தும் இந்த திரைப்படத்தில் கச்சிதமாக இருந்ததால், லக்கி பாஸ்கர் சக்கை போடு போட்டது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்துதான் தற்போது சூர்யாவை வைத்து வெங்கி அட்லூரி பணிபுரிந்து வருகிறார். இது முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்து வருகிறார்.
இவர்கள்போக ராதிகா, ரவீனா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் அனில்கபூர் இந்த திரைப்படத்தில் அண்மையில் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம், அனேகமாக அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குனர் ஜித்து மாதவனுடன் கைகோர்க்கிறார் சூர்யா. இது அவரின் 47-வது திரைப்படமாக உருவாகிறது. இதற்கான பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளும் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பஹத் பாஸில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆவேசம் திரைப்படத்தை ஜித்து மாதவன்தான் இயக்கியிருந்தார். இதனால் இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போலீஸ் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





