தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். பிரபல நடிகர்களின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். முதல்வன், அந்நியன், சிவாஜி, ஜீன்ஸ், எந்திரன், ஜெண்டில்மேன், நண்பன், காதலன் என ஷங்கர் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையாக உள்ளன.
கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் கமல் 2 வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கமலுக்கு 3வது முறையாக தேசிய விருது கிடைத்தது. ஏற்கனவே நாயகன், மூன்றாம் பிறை ஆகிய படங்களில் நடித்து அவர் தேசிய விருது பெற்றிருந்தார்.
ஆனால் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தியன் 2, இந்தியன் 3 என 2 படங்களை ஒரே நேரத்தில் இயக்கியதால் ஏற்பட்ட குழப்பத்தால் இயக்குனர் ஷங்கர் குழப்பி விட்டார் என்றும் ஒரு தகவல் பரவியது.
இந்த சூழலில் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை அஞ்சலி நடித்துள்ளனர். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் தலைநகரமான லக்னோவில் நடந்தது. இந்த விழாவில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, தயாரிப்பாளர் தில்ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்துக்கொள்ளாதது ரசிகர்களுக்கு கேள்வியை எழுப்பியது.
இதுகுறித்து கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா கூறுகையில், கேம் சேஞ்சர் படத்துக்கான எடிட்டிங் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. அந்த பணியில் பிஸியாக இருப்பதால்தான் இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்கவில்லை என்று கூறினார். அதே போல் மற்றொரு படத்தின் பின்னணி இசை பணியில் தமன் பிஸியாக இருந்ததால், இந்த விழாவுக்கு வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.





