நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் ரஜினிகாந்த் தேவா என்ற கேரக்டரில் ஹார்பர் கூலியாக நடித்திருந்தார். மேலும் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் அமீர்கான் நாகர்ஜூனா சத்யராஜ் சௌபின் சாஹிர் உபேந்திரா லொள்ளுசபா மாறன் காளி வெங்கட் உள்ளிட்டோரும் படத்தில் இருந்தனர். சில கேரக்டர்கள் இந்த படத்தில் இருந்தனர் என்பதே சரியான சொல்லாக இருக்கிறது.
ஏனென்றால் அமீர்கான் உபேந்திரா சத்யராஜ் போன்றவர்கள் இந்த படத்தில் நடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிக்க வேண்டிய இந்த சின்ன கேரக்டர்களில் நட்சத்திர நடிகர்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏன் நடிக்க செய்தார் என்பது கேள்வியாக உள்ளது. இந்த படத்தை பொருத்த வரை ரஜினிகாந்த் சௌபின் சாஹிர் அனிருத் என்ற 3 பேரும்தான் பாஸ் மார்க் வாங்கியவர்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில், உலகளவில் மொத்தம் 404 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு பின் தினசரி வசூலில் கூலி படம் பின்தங்கியது. அதுவும் ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படத்தை பார்க்க பேமிலி ஆடியன்ஸ் வராததால் கூலி படம், சில நாட்களிலேயே தியேட்டர்களில் காற்று வாங்கியது.
கூலி படம் எப்படியும் ரூ. 1000 கோடி வசூலை அள்ளிவிடும். தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் இதுதான் என்ற பெருமையும் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்தான். குறிப்பாக கேரளாவில் கூலி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு ரூ. 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எப்படியோ முட்டி மோதி திணறி இப்போது 12 நாட்களின் முடிவில் கூலி படம் ரூ. 490 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில் இன்றைய வசூல் நிலவரப்படி கூலி படம் ரூ. 500 கோடி வசூலை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கூலி படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியதன் மூலம் இதுவரை தமிழ் சினிமாவில் 500 கோடி ரூபாய் வசூலித்த தமிழ் படங்களில் 4வது படமாகவும், ரஜினி நடித்த படங்களில் 3வது படமாகவும் கூலி படம் அமைந்திருக்கிறது. அதாவது ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 மற்றும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஆகிய 2 படங்கள் ரூ. 500 கோடி வசூலை கடந்த நிலையில் இப்போது 3வது படமாக கூலி படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது.





