ரஜினிகாந்த் தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு மட்டுமே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ஒன்று அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம். ரஜினி படம் என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை தழுவியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டே ரஜினிக்கு, மற்றொரு திரைப்படமாக வேட்டையன் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜெய் பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இதனை ஞானவேல் இயக்கியிருந்தார். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இரண்டு திரைப்படங்களுமே ரஜினிகாந்த்க்கு பெரிய ஒரு வெற்றியை கொடுக்காத சூழலில், கடந்த 14ஆம் தேதி கூலி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அமீர்கான் நாகர்ஜுனா உபேந்திரா சத்யராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் இடம் பெற்று இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியான நிலையில், பலரும் கூலி திரைப்படம் சரியில்லை என்று கூறினார்கள். முக்கியமாக இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்பட்டதாகவும், எந்த ஒரு சீன்களிலும் லாஜிக் இல்லை என்றும் கூறினர். இருப்பினும் இந்த விமர்சனங்கள் கூலி திரைப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. வெறும் நான்கு நாட்களில் அந்த திரைப்படம் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை கூலி திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள். இப்படியான சூழலில், ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனேகமாக டிசம்பர் மாத இறுதியில், இதன் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா திரைப்படம், மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இதில் ரம்யா கிருஷ்ணன் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரஜினிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையேயான மோதலே அந்த திரைப்படத்தை மாபெரும் வெற்றியடைய செய்தது. இந்த நிலையில் பக்கா கமர்சியல் திரைப்படமான படையப்பா, மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதை அதன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார்.





