நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போது அரசியல் களத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். இதற்கிடையே அவரது மகன் ஜேசன் சஞ்சய் இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. சில டைட்டில்கள் சொல்லப்பட்டாலும் இன்னும் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் தவிர மற்ற யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு இந்த படத்தை முதல் காப்பி அடிப்படையில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் ரைக்சன் செய்து தர கமிட் ஆனதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு மொத்தமாக ஒரு பெரிய தொகை அவரிடம் கொடுக்கப்பட்டு அதை பயன்படுத்தி படப்பிடிப்பை அவர் முழுமையாக முடித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடக்காமல் முடங்கி கிடக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை முடிக்க இன்னும் 8 கோடி ரூபாய் தேவைப்படுவதால் கையில் பணம் இல்லாமல் ஷூட்டிங் தொடர்ந்து நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் மொத்தமாக பேசிய தொகையில் எப்போதுமே முதல் ஷெட்யூல் 2வது ஷெட்யூல் 3வது ஷெட்யூல் என அந்த தொகையை பிரித்து பிரித்து தருவதுதான் வழக்கம். அதுதான் தயாரிப்பு நிறுவனங்களின் நடைமுறை. அந்த வகையில் லைகா நிறுவனம் இன்னும் ரூ. 8 கோடி தராமல் இழுத்தடிப்பதால் படப்பிடிப்பு நின்றுவிட்டதா என்பது தெரியவில்லை.
அதே நேரத்தில் மொத்த தொகையை லைகா நிறுவனம் தந்த பிறகும், அதையும் மீறி படப்பிடிப்பு செலவு அதிகரித்ததால் இப்போது படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த ரூ. 8 கோடி தேவைப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் சரியான தகவல் எதுவென இன்னும் தெரியவில்லை. ஆனால் 8 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே இந்த படத்தை முடிக்க வேண்டும் என்ற நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





