இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு நடிப்பு என பல்வேறு பரிணாமங்களில் திரைத் துறையில் வலம் வருபவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் 2018 ஆம் ஆண்டு, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இதில் ரித்து வர்மா, ராதிகா, திவ்யதர்ஷினி, விநாயகம், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் உள்ளிட்டோர் நடித்தனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். படம் பரபரப்பாக எடுக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாரான நிலையில், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக முடங்கியது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கௌதம் மேனன், கடனுக்கு தள்ளப்பட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திலிருந்து, அண்மையில் வெளியான லியோ திரைப்படம் வரை பல்வேறு படங்களில் அவர் தோன்றினார். அதேசமயம், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் இரண்டு திரைப்படங்களை இயக்க ஒப்பந்தமானார். இதில் ஒரு திரைப்படமாக வெந்து தணிந்தது காடு 2022 ஆம் ஆண்டு வெளியானது.
சிம்பு கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. மும்பையில் கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே, வருண் என்பவரை வைத்து ஜோஸ்வா என்னும் திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
ஐசரி கணேஷின் உறவினரான வருண், ஏற்கனவே கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் வந்து போனார். நாயின் பாசத்தை மையமாக வைத்து, பப்பி என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் வருண். இப்படியான சூழலில் தான், வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் கௌதம் மேனன் இயக்கத்தில் கதாநாயகன் ஆனார் வருண்.
ஜோஸ்வா இமை போல் நான் காக்க எனும் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட, அதன் சூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் தற்போது வரை படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்படியான சூழலில், மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஜோஸ்வா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





