தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாளி. அதே போல் 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவாஜி எந்திரன் 2.0 ஆகிய 3 படங்களில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இந்த 3 படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
ஆனால் 2.0 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இனி ஷங்கர் இயக்கும் படத்தில் நடிப்பதில்லை என்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருக்கிறார். 2.0 படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அங்கிருந்த ஷங்கருக்கு நெருக்கமான ஒரு முக்கியமான நபரை அழைத்து, இதுதான் கடைசி படம்.
இனிமேல் ஷங்கர் இயக்கத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிடுங்க என்று உறுதியாக சொல்லிவிட்டு ரஜினிகாந்த் திரும்பி வந்திருக்கிறார். அதன்பிறகு ஷங்கருக்கும் ரஜினிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இதற்கிடையே இந்தியன் 3 படம் குறித்து ஷங்கரிடம் ரஜினி பேசியது கூட அவரது நண்பர் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் நட்புக்காக மட்டுமே அன்றி ஷங்கர் மீதான நட்பில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கருடன் சேர்ந்து இனிமேல் பணிபுரிய கூடாது. அவர் இயக்கும் படத்தில் நடிக்கவே கூடாது என்பதற்கான பல சம்பவங்கள் 2.0 படப்பிடிப்பின் போது நடந்திருக்கிறது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஷங்கரின் இயக்கத்தில் இனி ரஜினி நடிப்பதில்லை என்ற முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் 2.0 படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு சுமார் 15 கிலோ எடை கொண்ட ரோபோ ஆடை வழங்கப்பட்டுள்ளது.
அதிக எடையுள்ள அந்த ஸ்பெஷல் டிரஸ்சை போட்டுக்கொண்டு நடிக்க ரஜினி மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். லைட்டிங்கில் உடல் முழுக்க வியர்த்து கொட்டியிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி இயக்குனர் ஷங்கர், கேமரா மேன் என யாருமே கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் உதவி இயக்குனர்கள் இருவர், ரஜினிக்காக அதே போன்ற அரைகிலோ எடை கொண்ட ஆடையை தயார் செய்து இயக்குனர், ஒளிப்பதிவாளரிடம் சொல்லாமல் ரஜினிக்கு அணிய வைத்து நடிக்க வைத்துள்ளனர்.
ரஜினியும் அதை அணிந்துக்கொண்டு ரொம்பவும் மகிழ்ச்சியாக நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் இது தெரிய வர உதவி இயக்குனர்களை கடுமையாக திட்டிய இயக்குனர் ஷங்கர் மீண்டும் 15 கிலோ எடை கொண்ட ஆடையை கொண்டு வரச்சொல்லி ரஜினியை அணிய வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார். இப்படி பல விஷயங்களில் ரஜினியை அந்த படத்தில் கஷ்டப்படுத்தி இருக்கின்றனர் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.





