விருதுகள் என்பது கலைஞர்களுக்கு தரப்படும் ஒரு அங்கீகாரமாக அவர்களது திறமைக்கு கிடைக்கும் பெரிய அடையாளமாக உள்ளது. நாட்டில் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டது. நாட்டில் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவர்களால்தான் அந்த விருதுகளுக்கே பெருமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு கலை அமைப்புகள், பத்திரிகைகள் பொதுவான கலை அமைப்புகள் சார்பில் விருதுகளும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இது கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது சிறப்பை இன்னும் பலமடங்கு பெருமைப்படுத்துகிறது. அந்த வகையில் துபாயில் ஆண்டுதோறும் SIIMA – 2025 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
துபாயில் உள்ள எக்ஸ்போசிட்டியில் 13வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது SIIMA – 2025 விழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நடந்த விழாவில் தெலுங்கு கன்னடம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகள் திரைப்படங்களில் இருந்து சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அந்த வகையில் முதல் நாள் செப்டம்பர் 5ம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2ம் நாளான நேற்று 6ம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் படங்களில் அமரன் படம் சிறந்த படமாக விருது பெற்றது. அந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குனராக விருது பெற்றார்.
தொடர்ந்து அமரன் படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி சிறந்த நடிகை விருது பெற்றார். மகாராஜா படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் சிறந்த வில்லன் நடிகராகவும் அந்த படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் சிறந்த இயக்குனராகவும் விருது பெற்றனர். மலையாளம் மொழி பிரிவில் ஆடுஜீவிதம் படத்தில் நடித்த நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் சிறந்த நடிகராக விருது பெற்றார்.
ஆடுஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளஸ்லி சிறந்த இயக்குனர் விருது பெற்றார். இந்த விழாவில் மூத்த நடிகர் சிவகுமாருக்கு திரைத்துறையில் அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்புக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதேபோல் நடிகை திரிஷா, சினிமாவில் 25 ஆண்டுகள் அற்புதமாக பணியாற்றியதற்காக கௌரவிக்கப்பட்டார் பல முன்னணி நடிகர்கள், திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.





