கடந்த 2022ம் ஆண்டில் காந்தாரா படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்போது காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரிய வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடவுள் பக்தி கடவுளின் அவதாரத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான காந்தாரா படங்களை ரசிகர்கள் வரவேற்று பெரிய ஆதரவு தந்து வருகின்றனர்.
இந்த படங்களில் கடவுள் மனிதர்கள் மீது வருவது போலவும் அவர்கள் தெய்வ வாக்கு தருவது போலவும் கடைசியில் கடவுளே மனிதர்களின் வடிவில் தீயவர்களை அழிப்பது போலவும் படத்தில் காட்சிகள் வருகின்றன. இது கடவுள் பெயரில் ஏற்படுத்தும் மூடநம்பிக்கைகள் என்றும் ஒரு தரப்பினர் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நேர்காணல் ஒன்றில் நீயா நானா கோபிநாத்துடன் பங்கேற்றார். அப்போது அவரிடம் பேசிய கோபிநாத், காந்தாரா படம் ஒருபுறம் பாசிட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இன்னொருபுறம் இது மூட நம்பிக்கைகளுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்ற ஒரு விமர்சனமும் இருக்கிறதே என்ற கேள்வியை முன்வைத்தாா்.
அதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, கண்டிப்பாக அந்த விமர்சனங்கள் இருக்கும். யார் நம்பறாங்களோ அவர்களுக்கு அது பாசிட்டிவ். சிலர் நம்ப மாட்டாங்க. அவங்களுக்கு அது வேற மாதிரி இருக்கும். அதனால் இந்த விஷயத்தை நாங்க அந்த பக்கம் இந்த பக்கம் என்று சொல்ல மாட்டோம்.
நாங்கள் இருக்கிற ஒரு விஷயத்தை நாங்கள் நம்புகிறோம். எனக்கு என் குடும்பத்தோடு தொடர்புடைய ஒரு விஷயம் அது. தெய்வம் அந்த ஈஸ்வர கணம் எல்லாமே இருந்தது. அதனால் அதைப்பத்தி நாம் படத்தில் பேசறோம். நமக்கு மீறிய நமக்கு மேல ஒரு சக்தி இருப்பதை நான் நம்புகிறேன். அதை எல்லாருமே நம்புவாங்க. மனித சக்திக்கு மேல ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.
அதுவந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி காட்டுவாங்க. அதைப்பத்தி எனக்கு டென்சனே இல்லை. நான் கவலைப்பட மாட்டேன். அவரோட பார்வை அது. அதை நான் ஏத்துக்கிறேன். அதற்கு நான் மரியாதை தருகிறேன். அதே மாதிரி என்னோட நம்பிக்கையையும் நீங்க ரெஸ்பெக்ட் பணணனும் என்று கேட்டுக்கறேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி கூறியிருக்கிறார்.





