மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நவ்யா நாயர். இவர் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான். அழகிய தீயே மாயக்கண்ணாடி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ராமன் தேடிய சீதை பாசக்கிளிகள் ரசிக்கும் சீமானே போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.ஓணம் பண்டிகையை கொண்டாட சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற நடிகை நவ்யா நாயருக்கு ஒரு கசப்பான அனுபவம் நேர்ந்திருக்கிறது.
ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கி ரூ. 1.14 லட்சம் அபராதமும் அவர் செலுத்தி இருக்கிறார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு அவர் சென்றிருக்கிறார். அங்குள்ள விக்டோரியா நகர் மலையாள சங்கம் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு நடிகை நவ்யா நாயரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது
இதையடுத்து அவர் கொச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். விமானம் ஏறுவதற்கு முன்பு நவ்யா நாயரின் தந்தை, ஓணம் பண்டிகைக்கு செல்வதால் மல்லிகைப்பூ சூடிக் கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தி மல்லிகைப்பூ வாங்கி தந்துள்ளார். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது மல்லிகைப்பூ தேவைப்படும் என்பதால் நடிகை நவ்யா நாயர், தனது தந்தை கொடுத்த மல்லிகைப்பூவை இரண்டாகப் பிரித்து வைத்துள்ளார்.
கொச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனால் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து விமானம் மாறிச் செல்ல வேண்டும். அதனால் நடிகை நவ்யா நாயர் மல்லிகை பூச்சரத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு பகுதியை தனது தலையில் சூடிக்கொண்டு மற்றொரு பகுதியை கைப்பையில் வைத்துள்ளார். ஓணம் பண்டிகை நிகழ்ச்சி நடக்கும்போது மற்றொரு பகுதி மல்லிகை பூச்சரத்தை சூடிக் கொள்ள கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்த நடிகை நவ்யா நாயரின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. நவ்யா நாயரின் கைப்பையில் மல்லிகை பூ இருப்பது அப்போது தெரிய வந்தது. ஆஸ்திரேலியா நாட்டு விதிமுறைகளின்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பூக்கள் செடிகள் கொடிகள் இலைகள் என எதை எடுத்து வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது விதிமீறல். ஆனால் நவ்யா நாயர் தனது பையில் மல்லிகை பூச்சரம் இருப்பது குறித்த தகவல் தெரிவிக்காததால் போலீசார் அபராதம் விதித்தனர்.
இந்த விதிமுறை மீறலுக்கு அதிகபட்சமாக 1980 டாலர் அதாவது இந்திய ரூபாயில் 1.14 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு 28 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் அதற்கு பதிலாக சிறை தண்டனை என்றும் கூறியுள்ளனர். இந்த விதிமுறை குறித்து தெரியாததால் நான் 1.14 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினேன் இது எனக்கு ஒரு பாடம் என்று தனது பதிவில் நடிகை நவ்யா நாயர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





