எப்போதுமே முதல் பாகமாக வெளிவரும் படத்தின் அமோக வெற்றி 2ம் பாகத்துக்கு கிடைக்காது என்பதுதான் சினிமாவில் சென்டிமென்ட் ஆக இருந்து வருகிறது. முதல் படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. ஆனால் 2ம் பாகமாக வெளிவரும் போது அதே படங்கள் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி ரசிகர்களை ஏமாற்றி விடுகின்றன.
ஆனால் சில படங்கள் மட்டும் இதில் விதிவிலக்காக 2ம் பாகமும் மாஸ் ஹிட் படங்களாக அமைந்து முதல் பாகத்தை விட 2ம் பாகம் இன்னும் சக்கைப்போடு போட்டு விடுகின்றன. அந்த வகையில் பாகுபலி புஷ்பா போன்ற படங்களை சொல்லலாம். இப்போது அந்த வரிசையில் காந்தாரா படமும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களுமே இந்த படத்தை கொண்டாடினர்.
எதிர்பார்த்ததை விட பலமடங்கு வசூல் சாதனை செய்த காந்தாரா படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகி விட்டது. வருகிற அக்டோபர 2ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இந்த படம் காந்தாரா 2ம் பாகமாக வெளிவந்தாலும் படத்தின் கதை, காந்தாரா படத்தின் முந்தைய காலகட்டத்தை பற்றியது என்று சொல்லப்படுகிறது. அதாவது 800ம் ஆண்டுகளில் நடந்த கதையாக இது வெளியாகிறது.
இந்நிலையில் காந்தாரா 2ம் பாகம் படத்துக்கு தமிழ்நாட்டில் பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே வெளியான காந்தாரா படம் தமிழ்நாட்டில் மட்டும் வினியோகஸ்தர்களுக்கு ரூ. 5 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. அதனால் காந்தாரா 2ம் பாகத்தை வாங்கி தியேட்டர்களில் வெளியிட தமிழ்நாட்டு வினியோகஸ்தர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திக்கொண்ட காந்தாரா படத்தின் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாட்டை ஏரியா ஏரியாவாக பிரித்து மொத்தம் ரூ. 33 கோடிக்கு படத்தை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தியேட்டர் வினியோகம் வியாபாரம் மூலம் ரூ. 33 கோடியை காந்தாரா பட நிறுவனம் அள்ளியுள்ளது. முதல் படத்தில் ரூ. 5 கோடி ஷேர் வாங்கிய இந்த படம், 2வது படத்தில் ரூ. 28 கோடி அதிக விலைக்கு போயுள்ளது.





