தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரபு சாலமன். அவரது இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான படம் கும்கி. இந்த படத்தின் கதை என்பது மலைகிராம மக்கள், அங்குள்ள காட்டு யானையை விரட்ட கும்கி யானையை தங்கள் கிராமத்துக்கு வரவழைக்கின்றனர். ஆனால் அது கும்கி யானை அல்ல. கோவில் யானைதான்.
அந்த மலை கிராமத்துக்கு யானை பாகனாக வரும் விக்ரம் பிரபு, அந்த கிராமத்தை சேர்ந்த ஊர்த்தலைவர் மகள் லட்சுமி மேனனை காதலிப்பார். கும்கி யானைக்கு பதிலாக கோவில் யானையை விக்ரம் பிரபு கூட்டி வந்தது யாருக்குமே தெரியாது. அவருடன் தம்பி ராமையா, அஸ்வின் ஆகியோரும் யானை பராமரிப்பாளர்களாக வந்திருப்பார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தம்பி ராமையாவின் வசனங்கள் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தன. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தன. விக்ரம் பிரபு லட்சுமி மேனன் தம்பி ராமையா என 3 பேருக்குமே இந்த படம் ஒரு அடையாளமாக இருந்தது.
கொம்பன் என்ற காட்டு யானையை கடைசியில் கோவில் யானை சமாளித்ததா, விக்ரம் பிரபு லட்சுமி மேனன் காதல் ஜெயித்ததா என்பதுதான் இந்த படத்தின் கதை. நல்ல பாடல்கள் இசை இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. இந்நிலையில் கும்கி முதல் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு 2ம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.
கும்கி 2 படத்தின் அறிவிப்பை போஸ்டருடன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளனர். கும்கி முதல் பாகத்தில் உயிரிழக்கும் கும்கி யானை மீண்டும் பிறந்து விட்டேன் என்ற வாசகத்துடன் இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. கும்கி படத்தின் 2ம் பாகத்தையும் இயக்குனர் பிரபு சாலமன் தான் இயக்குகிறார். இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
ஆனால் முதல் படத்துக்கு டி இமான் இசையமைத்து இருந்தார். கும்கி 2 படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கும்கி 2 வீடியோவை வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்து இருக்கிறார். கும்கி படத்தில் விக்ரம் பிரபு அறிமுகமான நிலையில் 2ம் பாகத்திலும் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





