வெறும் இரண்டு இரண்டே திரைப்படங்கள் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனராக மாறி இருப்பவர் அஸ்வந்த் மாரிமுத்து. ஓ மை கடவுளே என்னும் திரைப்படத்தின் மூலம்தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காதல் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றால், அதில் ஓ மை கடவுளை தனிரகம் என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் ஒரு புதுமையை புகுத்தி இருப்பார் அஸ்வந்த் மாரிமுத்து.
காதலில் பேண்டஸியை கலந்தால் எப்படி இருக்கும் என்பதை, அருமையாக கூறியிருப்பார் இயக்குனர். காதல் திருமணம் கைகூடி போக, அதுவே ஒருத்தனுக்கு பின்னாடி எரிச்சலை உண்டு பண்ண, அந்த சமயத்தில் கடவுள் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதை கான்செப்டாக வைத்து அஸ்வந்த் மாரிமுத்து அந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் உடன் கைகோர்த்த அஸ்வந்த் மாரிமுத்து, டிராகன் திரைப்படத்தை கொடுத்தார். இந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில், அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்த காவியம் டிராகன் என்று கூறலாம்.
கல்லூரியில் சேரும் இளைஞருக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை டிராகன் திரைப்படத்தில் அழுத்தமாக கூறியிருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து. கல்வி, காதல், எதிர்கால வாழ்க்கை என அந்த திரைப்படத்தில் அனைத்தையும் பேசி, அதில் சோகத்தை திணிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு திரைப்படமாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் குவித்தது.
அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து, சிலம்பரசன் உடன் இணைந்திருக்கிறார். சிம்புவின் 51 வது திரைப்படமாக இது உருவாக அதனை, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் இதற்கான சூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனரிடம் இது குறித்து கேட்க, பலரும் சிம்புவைதான் காரணம் என்று கூறுகிறார்கள்.ஆனால், அது இல்லை.
நான்தான் இன்னும் இந்த திரைப்படத்தை முடிக்காமல் இருக்கிறேன். சில காலங்கள் குடும்பத்துடன் செலவிடுகிறேன். நாளை படப்பிடிப்பு தொடங்கினாலும் சிலம்பரசன் கலந்து கொள்ள தயாராக இருக்கிறார். இருப்பினும் கதையை இன்னும் நான் முடிக்கவில்லை. நிச்சயமாக இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். ஓ மை கடவுளே மற்றும் டிராகன் என இரண்டும் கலந்த கலவையாக இந்த திரைப்படம் அமையும். குத்து, தம், மன்மதன் திரைப்படத்தில் பார்த்த சிம்புவை நீங்கள் இதில் காணலாம் என்று தெரிவித்திருக்கிறார்.





