நடனக் கலைஞராக சினிமாவில் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ராகவா லாரன்ஸ். பிறகு நடன இயக்குனராக மாறி நடிகராக உயர்ந்தார். இப்போது தயாரிப்பாளர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். சினிமா மட்டுமின்றி சமூக சேவைகளிலும் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதற்காகவே மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை துவங்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, இன்று உங்கள் அனைவருக்கும் நான் வளர்த்த குழந்தைகளுடன் இணைந்து ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். என் புதிய திரைப்படம் காஞ்சனா 4 ஷூட்டிங் தொடங்க போகிறோம்.
ஒவ்வொரு படத்தின் அட்வான்ஸ் தொகையையும் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக எடுத்து வைத்து விடுவேன். அப்படித்தான் இந்த படத்தின் அட்வான்ஸ் தொகையை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்தப் போகிறேன். இந்த படத்தின் அட்வான்ஸ் தொகையுடன் என்னுடைய முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவச பள்ளியாக மாற்றப்போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வீட்டில் வளர்ந்த ஒருவரே இந்தப் பள்ளியின் முதல் ஆசிரியராக இருப்பார் என்பது எனக்கு இன்னும் பெருமை அளிக்கிறது. இந்த அறிவிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். என் திரைப்படங்களுக்கு வரும் அட்வான்ஸ் தொகையை வைத்து எனக்கு நெருக்கமான சமூகப் பணிகளை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் அட்வான்ஸை என் முதல் வீட்டை இலவச பள்ளியாக மாற்றுவதற்கு பயன்படுத்த உள்ளேன்.
இந்த வீடு எனக்கு மிகவும் சிறப்பானது. குரூப் டான்ஸ் ஆக இருந்தபோது சிறு சிறு தொகையாக அம்மாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தில் வாங்கியது தான் இந்த இடம். நடன இயக்குனராக நான் சம்பாதித்த முதல் பணத்தில் கட்டியது இந்த வீடுதான். பிறகு இதை ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லமாக மாற்றிவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாடகை வீட்டில் குடியேறினோம். இப்போது என் பிள்ளைகள் வளர்த்து வேலைக்கு செல்கிறார்கள். மீண்டும் இந்த வீட்டை இலவச பள்ளியாக குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
இதைவிட எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரும் விஷயம் என்னவென்றால் என் வீட்டில் வளர்ந்து படித்து இப்போது வளர்ந்திருக்கும் ஒரு குழந்தையே இந்த பள்ளியின் முதல் ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கிறார். அவரது பெயர் வேளாங்கண்ணி. இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவருக்கும் ஆசியும் வேண்டும். எப்போதும் போல உங்களின் ஆதரவு தொடரும் என நம்புகிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





