நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் உருவான படம் இட்லி கடை. ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நித்யாமேனன் சத்யராஜ் பார்த்திபன் ராஜ்கிரண் அருண்விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் விவகாரமாக பேசியிருப்பது இப்போது சமூக வலைதளங்களில் அனல் கிளப்பி வருகிறது.
இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசியதாவது, ஃபேமஸ் ஆக இரண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உழைச்சு டாப்புக்கு வருவது. 2வது டாப்புல இருக்குறவங்களை அடிச்சு மேலே வர்றது. தனுஷை வச்சு கிராஸ் பண்ணினவங்க அவரால் வளர்ந்தவங்க, அவர் வாழ்க்கை கொடுத்தவங்க நேருக்கு நேர் மோதினால் ஓகே. ஆனால் ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு பேசுவதை ஏத்துக்க முடியலே.
நடிகர் தனுஷ் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் ஹாலிவுட் என எல்லா வுட்லையும் படம் பண்ணிட்டார். தனுஷ் இனி நடிச்சா மட்டும் போதாது. பிஆர் பண்ணவும் கத்துக்கணும். ஒருத்தனை 10 பேர் அடிச்சா அவன் தலைவன். தலைவர் சொன்ன மாதிரி நல்லவனா இருங்க ரொம்ப நல்லவனா இருக்காதீங்க என்று ஸ்ரேயாஸ் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சு இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷால் உயர்ந்தவர்கள் என்று ஸ்ரேயாஸ் குறிப்பிட்டு பேசியிருப்பதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள், அவர் நடிகர் சிவகார்த்திகேயனை தாக்கி பேசியிருப்பதாக கூறுகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனை 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரே தனுஷ்தான். மேலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல் காக்கிச்சட்டை ஆகிய படங்களை தயாரித்து அவரை அடுத்தக்கட்டத்திற்கு உயர்த்திவிட்டதும் தனுஷ் தான் என்பதும் உண்மைதான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் உருவாகி ஈகோ காரணமாக இருவருக்கும் கடும் பகை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பரவ விடுவது சிவகார்த்திகேயனின் டீம்தான் என்ற மறைமுக குற்றச்சாட்டை இந்த விழாவில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் வைத்திருக்கிறார். தனுஷின் மேனேஜர் இப்படி பேசி இருப்பது நிச்சயமாக நடிகர் தனுஷின் அனுமதியின்றி நடந்திருக்காது. தனுஷ் பேச நினைத்ததை எல்லாம் தனது மேனேஜரை பேச வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





