நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை அறிவித்த போது, நாட்டு மக்களுக்கு நல்லது யார் வந்தாலும் வரவேற்போம். தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் என்று கூறியவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு விஜயை கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டார்.
அதுவும் விக்கிரவாண்டியில் அவர் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்த பிறகு சீமான், விஜயை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். தனது அரசியல் எதிரி திமுக என்று விஜய் கூறிய நிலையில், திமுகவை காட்டிலும் சீமான்தான் விஜய் குறித்து கண்டபடி பேசி வருகிறார். விஜய் பேசுவதை தொடர்ந்து கலாய்த்து தனது கட்சி மேடைகளில் சீமான் பேசி வருகிறார்.
கோவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது, நான் என் உச்சத்தை விட்டு அவ்வளவு வருமானத்தை விட்டு வந்தேன் என்று கூறும் விஜயை வா வா என யார் அழைத்தார்கள்? யார் வரச் சொன்னார்கள்?
உங்கள் வீட்டு வாசலில் நின்னு யாராவது அரசியலுக்கு வருமாறு கூப்பிட்டார்களா? அடைக்கலம் தேடி வரவில்லை படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். யார் வரச் சொன்னார்கள்? எதுக்கு வர்றீங்க? என்னோட அன்பு சகோதரர் அஜீத்குமாரும் ஐயா ரஜினிகாந்த்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை.
எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மனதில் இருப்பதை மக்கள் மொழியில் பேசுவார். எடப்பாடியும் தம்பி விஜயும் முழு சீட்டு வைத்து பேசுவார்கள். படித்து எழுதும் மாணவன், பார்த்து எழுதும் மாணவன் யார் சிறந்தவர் என்று மக்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
டிவிகே என்று சொல்லி வருவார்களிடம் நாங்கள் டீ விற்க வந்த கூட்டம் அல்ல இந்த நாட்டில் நிலவும் தீய அரசியலுக்கு தீ வைக்க வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் தளபதி தளபதி என்று கத்த வந்த கூட்டமில்லை. இந்த நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல. தத்துவ கூட்டம். கூடி கலைகிற காகங்கள் அல்ல, கூடிப் பெய்கிற மேகங்கள் என்று காட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் அந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





