நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற கன்னட படம் காந்தாரா. கர்நாடகாவில் பலத்த வெற்றியை வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஆந்திரா உள்பட மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களிலும் இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
இதையடுத்து தற்போது காந்தாரா சாப்டர் 1 என்ற டைட்டில் காந்தாரா படத்தின் 2ம் பாகம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. பல மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் வெளியீடு செய்யப்பட்டது. தமிழ் வெர்சனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 33 மில்லியன் பார்வையாளர்களை இது கடந்துவிட்டதாக தகவல் வெளியானது. 3 நிமிடங்கள் வரை இந்த டிரெய்லர் காட்சிகள் காணப்படுகின்றன.
எப்போதுமே முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 2ம் பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படும். அதனால் முதல் பாகத்தை விட 2ம் பாகத்தை சிறப்பாக தருவது இயக்குனர்களுக்கு பெரிய சவால்தான். அந்த வகையில் பெரும்பாலான இயக்குனர்கள் 2ம் பாகத்தில் தோற்றுவிடுவது சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆனால் பாகுபலி புஷ்பா சிங்கம் கேஜிஎப் போன்ற சில படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்து 2ம் பாகத்திலும் அதிரிபுதிரி வெற்றியை பெற்று சாதனை படைக்கின்றன. அதே நேரத்தில் இந்தியன் 2 பொன்னியின் செல்வன் 2 என பல படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளன.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கன்னட படமான காந்தாரா சாப்டர் 1 படத்தை ஏரியா வாரியாக 36 கோடி ரூபாய்க்கு தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் 80 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு தியேட்டர் வசூலித்தால் மட்டுமே போட்ட காசை வினியோகஸ்தர்கள் திரும்ப எடுக்க முடியும். ஆனால் டிரெய்லரை பார்த்த பலரும் அம்புலிமாமா கதை போல இருக்குதே, இந்த படம் அந்தளவுக்கு ரசிகர்களிடம் எடுபடுமா, போட்ட காசை திரும்ப எடுக்க முடியுமா என்ற கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.





