தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நெப்போலியன். இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். எனினும் அவ்வப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். புதுநெல்லு புதுநாத்து சீவலப்பேரி பாண்டி எட்டுப்பட்டி ராசா கரிசக்காட்டு பூவே போக்கிரி தசாவதாரம் விருமாண்டி போன்ற பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் கூறியதாவது, குஷ்பு மற்றும் ராதிகா ரெண்டு பேருமே சிறந்த நடிகைகள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பயங்கரமாக நடிப்பார்கள். அவர்களுக்கு நிகராக என்னால் நடிக்க முடியாது என்றாலும் அதில் குறை வந்துவிடக்கூடாது என்ற பயத்தில்தான் அவர்களுடன் நான் நடிப்பேன். ராதிகாவுடன் 3, 4 படங்கள் நடித்திருக்கிறேன். குஷ்புவுடன் 7 படங்கள் நடித்திருக்கிறேன். இரண்டு பேருமே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள்.
கேப்டன் மகள் படத்தில் நடிக்கும் போது குஷ்புவும் நானும் ஊட்டிக்கு ஷூட்டிங் போய் விட்டோம். 2 நாள் ஷூட்டிங் நடந்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எல்லோரும் வேலை செய்வதை பார்த்த குஷ்பு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அடுத்த நாள் சூட்டிங் வரும்போது 120 ஸ்வட்டர் வாங்கி கொண்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தார். எல்லோரும் குளிரில் கஷ்டப்படுறீங்க என்று சொல்லிக் கொடுத்தார்.
அந்த மனித தன்மையை ஒரு கதாநாயகியாக நான் குஷ்புவிடம் தான் பார்த்தேன். அந்த மாதிரி நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர். ஒரு முறை ஒரு மீட்டிங் நடந்தது. ரஜினி கமல் அங்கு உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது நான் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அப்போது கமல், என்னுடைய கையை இறுக்க பிடித்துக் கொண்டு, நீங்க நடிச்ச சீவலப்பேரி பாண்டி படம் பார்த்தேன்.
ரொம்ப அற்புதமா நடிச்சி இருந்தீங்க. அந்த கதை நான்தான் நடிக்க வேண்டியது. நான் செய்திருந்தாலும் இந்த அளவு செய்திருக்க முடியாது. ரொம்ப அற்புதமாக இருந்தது என்று பாராட்டினார். எனக்கு அப்படியே சிலிர்த்து போய்விட்டது. எவ்வளவு பெரிய நடிகர் என்னை இப்படி பாராட்டுகிறாரே என்று நினைத்தேன். அதன்பிறகு உங்களோடு நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று அவரிடம் கேட்டேன். அப்போது பார்ப்போம் பார்ப்போம் என்று மட்டும் சொன்னார்.
அதன் பிறகு 98ம் ஆண்டில் அழைத்து எனக்கு ஒரு கதை சொன்னார். நான் பிரமித்து போய்விட்டேன். ஆனால் கதையில் நான் வில்லன் என்பதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு அவர் கூப்பிடவே இல்லை. அவசரப்பட்டு அவர் கொடுத்த வாய்ப்பை மறுத்து விட்டோமா என்று நினைத்தேன். ஆனால் 2004ம் ஆண்டில் திடீரென அழைத்து எனக்கு கதை சொன்னார். பாசிட்டிவ் கேரக்டர் என்றவுடன் உடனே ஒப்புக் கொண்டேன். அதுதான் விருமாண்டி நல்லப்ப நாயக்கர் கேரக்டர். அடுத்து தசாவதாரம் படத்திற்கும் என்னை கூப்பிட்டார் என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கிறார்.





