நடிகர் தனுஷ் நடித்த இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை அவரே டைரக்ட் செய்து இருக்கிறார். இட்லி கடை படத்தில் நித்யா மேனன் ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண் விஜய் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இட்லி கடையை கதைக்களமாக கொண்ட உருவான இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு பேமிலி டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜின் பயோபிக் என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். இன்னும் ஒரு தரப்பினர் ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத் அண்ணாமலை படங்களின் கலவை என்றும் கூறுகின்றனர்.
ராயன் படத்துக்கு பின் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. அதன்பிறகு தனுஷ் நடித்த குபேரா படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் இட்லி கடை குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
இட்லி கடை படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. அப்போது விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, சின்ன வயதில் நான் கொஞ்சம் சேட்டை பிடித்த பையன் தான். ஆனால் என்னை விட சேட்டை பிடித்தவர் செல்வராகவன். அவர் என்னைவிட 8 வயது பெரியவர். அவர் ரொம்பவும் இன்ட்ரோவெர்ட். அப்படி இருக்கும்போதும் அவர் சேட்டை பிடித்த பையன் தான்.
சின்ன வயதில் என்னை கிரிக்கெட் விளையாட கூட்டி செல்வார். எப்படியும் டாஸில் என்னை ஏமாற்றி அவர் முதலில் பேட்டிங் செய்வார். நான் மூன்று மணி நேரம் பந்து வீசுவேன். ரொம்பவும் கஷ்டப்பட்டு அவரை அவுட் ஆக்கினால் அவர் பேட்டை கீழே போட்டுவிட்டு ஓடிவிடுவார். பல நேரங்களில் நான் பேட்டிங்கே பிடித்ததில்லை. பவுலிங் மட்டுமே போட்டுள்ளேன்.
அதேபோல் சின்ன வயசில் 5 பைசா 10 பைசா 20 பைசா என நான் சேர்த்து வைப்பேன். அது 4 ரூபாயாக 5 ரூபாயாக சேர்ந்து விட்டால் ஏதாவது வாங்கி சாப்பிடுவேன். ஆனால் அந்த பணத்தை செல்வராகவன் எனக்குத் தெரியாமல் திருடிக் கொண்டு சென்று விடுவார். இந்த அண்ணன்களுக்கு எல்லாம் தம்பிகளை கொடுமை செய்வதில் என்னதான் அப்படி ஒரு சந்தோஷமோ என்றே தெரியவில்லை என்று நடிகர் தனுஷ் அந்த நிகழ்ச்சியில் ஜாலியாக பேசியிருக்கிறார்.





