தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் 3வது வாரமாக சனிக்கிழமையான இன்று மக்கள் சந்திப்பு பயணத்தில் நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது,
நான் சுற்றுப்பயணம் செல்லும் இடத்தில் எல்லாம் மக்கள் ஒரே ஒரு விஷயத்தை தான் சொல்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் சாலை வசதி குடிநீர் வசதி, மருத்துவம் பெண்கள் பாதுகாப்பு இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதைத்தான் நானும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு வாக்குறுதியாக சொல்கிறேன். கல்வி ரேஷன் பொருட்கள் விநியோகம் தரமான குடிநீர் சாலை வசதி போக்குவரத்து வசதி தடையில்லா மின்சாரம் பெண்கள் பாதுகாப்பு சீரான சட்டம் ஒழுங்கு தவெக ஆட்சியில் சரியாக வழங்கப்படும் என்று சொல்கிறேன். எது நடைமுறைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதையே நாங்கள் சொல்வோம். மக்களுக்கு செய்வோம்.
திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு சொல்ல மாட்டோம். அதை விடுத்து புதுசா எதுவும் சொல்லுங்க என்று சொன்னால் சிஎம் போல் அடித்து விடற மாதிரி செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி அமைக்கப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், காற்றில் கல்வீடு கட்டப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும் என்றெல்லாம் தான் நான் சொல்ல வேண்டும். அப்படி நானும் அடிச்சி விடட்டுமா?
எந்த காலத்திலும் பாசிச பாஜகவோடு தவெக ஒத்துப் போகாது. திமுக போல் பாஜகவின் மறைமுக கூட்டாளியாகவும் இருக்காது. அதிமுகவை போல் அம்மா அம்மானு சொல்லிட்டு பொருந்தாத கூட்டணி அமைக்க மாட்டோம். பாஜக தமிழகத்துக்கு என்ன செய்து விட்டது? நீட் தேர்வை ஒழித்து விட்டதா? தமிழகத்திற்கு தேவையானது எல்லாம் செய்து விட்டதா? அப்புறம் ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று அதிமுக விசுவாசிகள் எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள் மக்களே. திமுகவுக்கும் பாஜகவுக்கும் அண்டர்வேர்ல்ட் டீலிங் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். திமுகவுக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி தான். அவர்கள் வெளியே அடித்துக் கொள்வது போல் தெரியும். ஆனால் உள்ளுக்குள்ளே டீலிங். வேண்டாம் மக்களே ஜாக்கிரதையா யோசிங்க மக்களே.
வருகிற 2026ல் தவெக திமுக இடையே தான் போட்டி. மாபெரும் மக்கள் சக்தி கொண்ட கொண்ட எளியவர்களின் குரலாக இருக்கும் தவெகவுக்கும், கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்து மக்களை ஏமாற்றும் திமுகவுக்கும் தான் போட்டி. மக்களை ஏமாற்றும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை மனசாட்சி உள்ள மக்களாட்சி தரக்கூடிய தவெக ஆட்சி அமைக்க வேண்டுமா என்று யோசியுங்கள். என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள். இவ்வளவு நம்புகிறீர்கள் ஒரு கை பார்த்து விடலாம் சத்தியமாக சொல்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி நிச்சயம் என்று விஜய் பேசினார்.





