நடிகர் அபிராம் வர்மா நடிகை சனா இணைந்து நடிக்கும் மௌனம் என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, நான் இட்லிகடை படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தேன். ஏன் கௌரவ வேடம் என்று கேட்கிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து எனக்கும் தனுஷூக்கும் ஒன்றாக நடிப்பதில் சண்டை இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவர் நடிக்க இருந்த கேரக்டரில்தான் நான் நடித்தேன். ஆடுகளம் படத்தில் கூட நான்தான் நடிக்க வேண்டியது. சூதாடி படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். ஆனால் படப்பிடிப்பு தொடரவில்லை.
அந்த பாசத்தில் இட்லி கடை படத்தில் நடித்தேன். அந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்து என் மகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறேன். அவர் நெல்சன் லோகேஷ் கனகராஜ் மாதிரி பெரிய படம் பண்ணப் போகிறார். இப்போது பெரிய படங்களில் எனக்கு சின்ன ரோல் கொடுக்கிறார்கள். என் பையன் படத்திலும் சின்ன ரோல்தான்.
அந்த படத்திற்காக தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறோம். என் மகன் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. சினிமாவில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை. மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். நான் கூட பார்த்திபன் மனிதநேய மன்றம் தொடங்கினேன். சோத்துக்கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன்.
ஆனால் அரசியல் வேறு களம். நல்லது செய்ய நினைத்தால் மனசு இருந்தால் மட்டும் போதாது. பணம் மற்றும் பவர் வேண்டும். இப்போது விஜய் வருகிறார். இது நல்ல விஷயம்தான். இப்படி பலர் வரவேண்டும். அப்போதுதான் அது நன்றாக இருக்கும். நான் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசவில்லை. கரூர் சம்பவத்தால் பல கருத்துக்கள் எழுகின்றன.
அந்த விவாகரத்தால் விஜயை கைது செய்யணுமா என்று கேட்கிறார்கள். அதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி இருக்கிறார். இப்படி பேசுவது அத்துமீறல். வரும் 2026ல் நான் அரசியலுக்கு வரவில்லை. நான்தான் சிஎம் என்ற படம் எடுக்க போகிறேன் என்று நடிகர் பார்த்திபன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





