தமிழ் சினிமாவில் நடிகராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் பாலாஜி. பல படங்களில் சிவாஜி கணேசனுடன் நடித்திருக்கிறார். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். பில்லா போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தயாரிப்பாளர் பாலாஜியின் மகள்தான் நடிகர் மோகன்லாலின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் சினிமா உலகத்திற்கு வந்த பொழுது மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். எம்ஜிஆருடன் என் கடமை என்ற ஒரு படத்தில் மட்டும் நான் நடித்துள்ளேன். ஒரு தீபாவளி பண்டிகையின்போது ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிகவும் கவலையோடு நான் கடைவீதியில் வந்து கொண்டிருந்தேன்.
என்னை கடந்த சென்ற ஒரு கார் எனக்கு முன்னால் நின்றது. காரின் ஜன்னல் வழியாக ஜானகி அம்மையார் என்னை அழைத்தார். நான் அருகில் சென்று பார்த்த பொழுது எம்ஜிஆர் உள்ளே அமர்ந்திருந்தார். என்னிடம் எப்படி இருக்கிறாய்? எத்தனை படங்களில் நடிக்கிறாய் என்று என் குடும்ப நலனை விசாரித்தார்.
பின்னர் நான் உன்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதே என்று கார் புறப்படும்போது என்னிடம் என் கையில் எம்ஜிஆர் பணம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். பத்து100ரூபாய் நோட்டுகள் என 1000 ரூபாய் இருந்தது. அன்று 1000 ரூபாய் என்பது இன்று லட்சத்துக்கு சமம். என் குடும்பத்திற்கு ரெடிமேட் துணிகள் வாங்கிக்கொண்டு குழந்தைக்கு பலகாரங்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன்.
கொஞ்சம் கடன் எல்லாம் கொடுத்தது போக என் கையில் எம்ஜிஆர் கொடுத்த பணத்தில் 300 ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தது. பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 ரூபாய் 100 ரூபாய் எடுத்து செலவழித்தேன். இப்போது எம்ஜிஆர் கொடுத்த பணத்தில்100 மட்டும் என்னிடம் இருந்தது. அடுத்து செலவுக்கு பணம் இல்லை என்றால் அந்த 100 ரூபாயை எடுத்து செலவழிக்கலாம் என்று நினைத்தேன்.
அப்போது என் மனதிற்குள் எம்ஜிஆர் கொடுத்த அந்த அதிர்ஷ்டமான பணத்தை செலவழிக்க கூடாது என்று நினைத்தேன். அடுத்தடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தது. எம்ஜிஆர் கொடுத்த 100 ரூபாயை மணிபர்ஸில் போட்டோ வைக்கும் பகுதியில் வைத்து அந்தப் பணத்தில் எம்ஜிஆர் என்று பெயர் எழுதி வைத்தேன். அதற்குப் பிறகு எனக்கு பணத்திற்கு மேல் பணம் வந்து கொண்டே இருந்தது. இப்பொழுதும் எம்ஜிஆர் கொடுத்த அந்த 100 ரூபாயை என் பர்ஸில் பத்திரமாக வைத்துள்ளேன் என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி கூறியிருக்கிறார்.





