திரைத் துறைக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் விக்ரம். இவரது ஆகச்சிறந்த நடிப்புக்காகவே, அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இங்கு உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார் விக்ரம். இருப்பினும் கடைசியாக வெளிவந்த வீர தீர சூரன் திரைப்படம், அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.
இவரது மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்காக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இது வெற்றி பெறவில்லை. பிறகு தனது தந்தையுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்தார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
நல்ல விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாததே பெரிய குறையாக அமைந்தது. ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் களம் இறக்கப்பட்டதால் பலருக்கும் இந்த திரைப்படம் சென்று சேரவில்லை. இப்படியான சூழலில் ஒரு பெரிய இடைவேளை எடுத்துக்கொண்ட துருவ் விக்ரம், மூன்றாவதாக மாரி செல்வராஜுடன் கைகோர்த்து இருக்கிறார்.
பைசன் என்னும் பெயரில் இந்த திரைப்படம் ரெடியாகி இருக்கிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை மையமாகக் கொண்டு இந்த கதையை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ். அதுமட்டுமல்லாமல் மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதை எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பசுபதி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வந்தார். மாமன்னன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த முறை பைசன் படத்திற்காக நிவாஸ் கே பிரசன்னா உடன் கைகோர்த்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தக் காம்போ எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், அந்தப் படத்தில் இருந்து வெளியான நான்கு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி உள்ளன.
வரும் 17ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை பீனிக்ஸ் மாலில் பைசன் படத்திற்கான நிகழ்ச்சி நடைபெற அதில், துருவ் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு நான் இரண்டு திரைப்படங்கள் பண்ணிருக்கிறேன். இவைகளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் எனக்கு பரவாயில்லை. ஆனால் பைசனை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். சொல்லப்போனால் இதுதான் என்னுடைய முதல் திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக நான் 100% உழைத்து இருக்கிறேன். மாரி செல்வராஜ் சார் இறங்கி சம்பவம் செய்திருக்கிறார் என்று பேசியுள்ளார்.





