ஒரு படைப்பு சிறப்பானதாக இருந்து விட்டால் அந்த கலைஞன் யார் எந்த மொழி சார்ந்தவர் என்ற பாகுபாடு ரசிகர்களுக்கு இருப்பதில்லை. ஏனெனில் எல்லை வரையறைக்கும் கட்டுப்படாததுதான் கலை. அதனால்தான் எந்த மொழி சார்ந்த திரைக்கலைஞரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுகின்றனர். வரவேற்கின்றனர். ஜெயிக்க வைக்கின்றனர்.
அந்த வரிசையில் இன்று கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது காந்தாரா காந்தாரா சாப்டர் 1 படங்களை இயக்கிய நடித்து இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலைஞராக புகழ் பெற்று இருக்கிறார். ஆன்மிக திரைக்களத்தில் பக்தி பரவசத்தில் அவர் உருவாக்கிய காந்தாரா படங்கள் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டன.
ஏதோ நான்கு சண்டை காட்சிகளில் அதிரடி காட்டி நடித்தோம், இரண்டு பில்டப் காட்சிகளில் கெத்தாக நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கினோம், டைரக்டர் எழுதி தந்த வீர வசனங்களை நெஞ்சு நிமிர்த்தி பேசி ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தோம். என்னை விட சிறந்த வீரன் யாருமில்லை என்று வழக்கம் போல் திரையில் சில சாகசங்களை விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தால் காட்டி ரசிகர்களை வாய்பிளக்க வைத்தோம் என்கிற ஹீரோயிசம் நாயகனாக ரிஷப் ஷெட்டி இல்லை.
காந்தாரா காந்தாரா சாப்டர் 1 படங்களில் நல்ல கதையம்சமும் திரைக்கதை ஓட்டமும் இருக்கிறது. கடவுள் தன்மையை மையப்படுத்திய திரைக்களத்தில் ரிஷப் ஷெட்டி தன்னால் இயன்ற ஒரு நல்ல அனுபவத்தை படமாக ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். இதிலும் குறைபாடுகள் இருந்தாலும் ஒரு திரைக்கலைஞனாக இயக்குனராக படைப்பாளியாக அதையும் தாண்டி ரிஷப் ஷெட்டி தன் கலை படைப்பை தந்து ஜெயித்திருக்கிறார்.
ஏனெனில் சிறிதும் சினிமாத்தனமே இல்லாத ஒரு சினிமா என்பது இன்றைய சூழலில் சாத்தியம் இல்லை என்ற உண்மையையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் சில காட்சிகளில் ரிஷப் ஷெட்டி அந்த சினிமா தனத்துக்குள் இருந்துதான் வெளிவந்திருக்கிறார். எனினும் ஒரு நடிகராக இயக்குனராக காந்தாரா படங்கள் அவரை சிறந்த படைப்பாளியாக ரசிகர்கள் மத்தியில் ஜெயிக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் பருத்திவீரன். இன்னும் அந்த படத்தை எல்லோரும் காதலிக்கிறார்கள். கார்த்தி அவ்வளவு அழகாக அந்த படத்தில் நடித்திருப்பார். அவர் ஒரு துணிச்சலான மனிதர். சமயத்தை தாண்டியும் பேசப்படும் ஒரு படம். பாரதியின் உணர்வும் கார்த்தியும் தைரியமும் சேர்ந்து பருத்திவீரன் படம் வேற லெவலாக இருக்கும் என்று பருத்தி வீரன் படத்தை நடிகர் கார்த்தியை ரிஷப் ஷெட்டி வெளிப்படையாக பாராட்டி பேசியிருக்கிறார்.





