தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலமாக பல்வேறு கலை பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.
மேலும் பாரதியார் எம் எஸ் சுப்புலட்சுமி பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகளும் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் 2021ம் ஆண்டு 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடிகை சாய் பல்லவி இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலைமாமணி விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.
கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். பாடகர் கே ஜே ஜேசுதாஸூக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
ஆனால் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் அமெரிக்காவில் இருப்பதால் அவரது சார்பில் அவரது மகன் பாடகர் விஜய் ஜேசுதாஸ் விருதை பெற்றுக் கொண்டார். எனினும் கேஜே ஜேசுதாஸ் காணொளி வாயிலாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் அவர் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் பிரபு எஸ் ஜே சூர்யா இசையமைப்பாளர் அனிருத் நடிகை சாய் பல்லவி இயக்குனர் லிங்குசாமி ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் கவிஞர் விவேகா நடிகர்கள் மணிகண்டன் ஜார்ஜ் மரியான் சாண்டி கமலேஷ் மெட்டி ஒலி காயத்ரி இயக்குனர் விக்ரமன் மனைவி நடனக் கலைஞர் ஜெயப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களும் முதல்வர் ஸ்டாலின் கையால் கலைமாமணி விருது பெற்றனர்.
கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட பாடகி ஸ்வேதா மோகனுக்கு பதிலாக அவரது அம்மா சுஜாதா விழாவில் கலைமாமணி விருதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர்கள் முபெ சாமிநாதன் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவை தொடர்ந்து கலைமாமணி விருது விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.





