கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி அதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய். அப்போது தி கோட் படத்தில் அவர் நடித்து வந்த நிலையில் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தார். அந்த படம்தான் ஜனநாயகன். அடுத்த ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இந்த சூழலில் நடிகர் விஜய் வருகிற 16ம் தேதி ஈரோடு வருகிறார் என்ற அறிவிப்பை கட்சியின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பெருந்துறை ரோட்டில் உள்ள சுமார் 7 ஏக்கர் இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
வரும் 16ம் தேதி பிற்பகல் நடக்கும் தவெக கொங்கு மண்டல பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் விஜய் பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் ஈரோடு பகுதியில் அவருக்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி வழங்கியுள்ளார். கொங்கு மண்டல பகுதிகளான கோவை ஈரோடு திருப்பூர் கரூர் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். செங்கோட்டையன் தலைமையில் கூட்டத்துக்கான விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு பிறகு திறந்தவெளியில் மீண்டும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரிய ஆரவாரம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் கட்சியில் இணைந்த நட்சத்திர மேடை பேச்சாளர் தவெக கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் இந்த கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
அதிமுக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் முதல் கூட்டம் இது. கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் முதன்முறையாக பங்கேற்கும் கூட்டமும் இது என்பதால் அரசியல் கட்சிகளிடையே இது அதிக முக்கியத்துவமும் கவனமும் பெற்ற ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.





