தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான படையப்பா முத்து அவ்வை சண்முகி நாட்டாமை சேரன் பாண்டியன் சமுத்திரம் என பல படங்கள் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இப்போது கேஎஸ் ரவிக்குமார் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சேரன். பிறகு அவரும் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். பாரதி கண்ணம்மா பொற்காலம் பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் வெற்றிக்கொடி கட்டு என பல சூப்பர் ஹிட் படங்களை தந்திருக்கிறார்.
இப்போது இயக்குனர் சேரனும் நடிகராக மாறிவிட்டார். அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்த சேரன் அதன்பிறகு பிற இயக்குனர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல மறந்த கதை பிரிவோம் சந்திப்போம் ராமன் தேடிய சீதை என பல படங்களில் சேரன் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாட்டாமை படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் யானை கட்டி போரடிப்பது போன்ற காட்சியை எடுக்க நான் திட்டமிட்டு இருந்தேன். அதனால் அங்கிருந்து தயாரிப்பாளருக்கு போன் செய்து, நான் இந்த விஷயத்தை சொன்னேன். மேலும் யானைகளுக்கு இங்கு அதிக வாடகை கேட்கிறார்கள் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும் என்றும் சொன்னேன்.
அதற்கு தயாரிப்பாளர் யானை எதுவும் வேண்டாம். குதிரையை வைத்து அந்த காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். யானை கட்டி போரடித்தான் பாண்டிய மன்னன் என்பதுதான் சார் கதை. குதிரைகளை வைத்து போரடிக்க முடியாது. அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேன். அதற்கு தயாரிப்பாளர், அவ்வளவு எல்லாம் செலவு செய்ய முடியாது சும்மா ஆட்களை வைத்து போரடித்துக் கொள்ளுங்கள் என்று கறாராக கூறிவிட்டார்.
படத்தில் வரும் அந்த காட்சியில் எனக்கு யானை வைத்து போரடிப்போம் என்று மைண்டில் பிக்ஸ் ஆகிவிட்டது. அதனால் அப்போது என்னிடம் உதவி இயக்குனராக இருந்த சேரனிடம், நீ கேரளாவுக்கு சென்று யானையை கொண்டு வா என்று அனுப்பிவிட்டேன். எனக்காக சேரன் போய் கேரளாவில் பேசி ஒரு யானைக்கு ஒரு லாரி என்று ஐந்து யானைகளை ஐந்து லாரிகளில் கஷ்பட்டு கொண்டு வந்து சேர்த்தார் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.





