தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. குறிப்பாக வைகாசி பொறந்தாச்சு அண்ணாமலை பாட்ஷா என் ஆசை மச்சான் சூரியன் என நூற்றுக்கணக்கான படங்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். இப்போது சினிமாவை காட்டிலும் இசை கச்சேரிகளை அதிகளவில் தேவா நடத்திக் கொண்டிருக்கிறார்.
தேவா இசையமைத்த பல சூப்பர் ஹிட் பாடல்களை இப்போது சில புதிய படங்களில் சில இயக்குனர்கள் அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்காக தேவா அவர்களிடம் காப்பிரைட் கேட்பது இல்லை. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடும் கேட்பது இல்லை.
இதுகுறித்து தேவா ஒருமுறை செய்தியாளர்களிடம் கூறுகையில், 30 35 ஆண்டுகளுக்கு முந்தைய எனது இசையில் உருவான பாடல்களை இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் இன்றைய இயக்குனர்களுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும். என் பாடல்களை இப்போதைய இளைய தலைமுறையும் ரசிக்க அது வாய்ப்பாக மாறுகிறது என்று மகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, நிறைய பேர் நமக்கு 25 வயசு ஆகுதே, இன்னும் நல்ல வாழ்க்கை அமையலையேன்னு ஏங்கிட்டு இருப்பாங்க. நமக்கு 30 வயசு ஆகியும் இன்னும் வாழ்க்கையில் முன்னேறாமல் அப்படீன்னு ரொம்பவும் கவலைப்படுவாங்க.
ஒரு சினிமாவை வெற்றிப்படம் என்று சொல்கிறோமே, அந்த படமே முதல் பாதி சுமாராக இருக்கும். இடைவேளைக்குப் பிறகு படம் பிக்கப் ஆகும். கிளைமாக்ஸ் எல்லாம் அப்படி இருக்கும். அது மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும். அப்படித்தான் மனிதர்களோட வாழ்க்கையும். எப்ப வேண்டுமானாலும் வாழ்க்கை சூழல் மாறிவிடும்.
நானே 40 வயசுல தான் சினிமாவுக்கு இசையமைக்க வந்தேன். என் படமே இன்டர்வெல்லுக்கு அப்புறம்தான் சக்சஸ் ஆச்சு. அதனால 25 வயசு 30 வயசு ஆகிடுச்சுன்னு சொல்லி வாழ்க்கையை நினைத்து ஏங்காதிங்க, ரொம்பவும் கவலைப்படாதீங்க. வாழ்க்கையில் எந்த வயதில் இருந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று இசையமைப்பாளர் தேவா நம்பிக்கையாளித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





