கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தை சொந்தமாக தயாரித்திருந்தார். அவரே ஸ்கிரிப்ட்டும் எழுதியிருந்தார். இது முழுக்க முழுக்க ரஜினியின் படமாகவே இருந்தது.
படையப்பா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ரஜினிக்கு அப்பா கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இதுதான் சிவாஜி கணேசனின் கடைசி படமாக அமைந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தயாரிப்பாளர் ரஜினிகாந்த் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வில்லி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படையப்பா படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ம் தேதி படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமே 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படையப்பா படம் ரி ரிலீஸ் ஆன நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 12 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று படையப்பா படத்தை நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தியேட்டரில் வந்து பார்த்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, 25 ஆண்டுகளுக்கு பிறகு படையப்பா படத்தை மீண்டும் எல்லோரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் ரசிகர்களுடன் அமர்ந்து படையப்பா படத்தை இன்று பார்த்தேன்.
25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா எழுதிய கதை இப்போதும் புதிய படத்தை பார்ப்பது போல் இருக்கிறது. டிசம்பர் 12ம் தேதியே தியேட்டருக்கு வந்து படையப்பா படம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் நான் அன்று அப்பாவுடன் திருப்பதிக்கு சென்றதால் அந்த நாளில் ரசிகர்களுடன் படம் பார்க்க முடியவில்லை. பாடல்கள் எல்லாம் நான் ஒன்ஸ்மோர் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஊஞ்சல் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் ஒன்ஸ்மோர் செய்து இப்போதுதான் பார்க்கிறேன்.
அப்பா ஈஸ் ஏன் எமோசன் அவ்வளவுதான். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள். படையப்பா ரி ரிலீஸ்க்காக அப்பா கொடுத்த பேட்டியை நான்தான் இயக்கினேன். அதுவே எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





