ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் இன்று மதியம் நடிகர் விஜய் பங்கேற்ற தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவுக்கு கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தலைமை வகித்தார். பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.
கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, எந்தவிதமான வளர்ச்சி திட்டப் பணிகளையும் செய்யாமல் திமுக கதை கதையாக பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஈரோட்டில் மஞ்சள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கான எந்த விதமான விஷயங்களையும் திமுக செய்யவில்லை. நாட்டு மக்கள் நலனில் சிறிதும் திமுகவுக்கு அக்கறை இல்லை.
திமுகவுக்கு 24 மணி நேரமும் என்ன யோசனை என்றால் இந்த விஜயை எப்படி முடக்கலாம், தவெக கட்சியை எப்படி திட்டமிட்டு முடக்கலாம் என்பதுதான். ஆனால் நானோ என் கட்சியோ எப்போதுமே மக்கள் சக்தியால் நிமிர்ந்து நிற்கும். உங்கள் ஆட்சி குறைபாடுகளை தவெக எதிர்த்து நின்று கேள்வி கேட்கும். இப்படி மாடல் அரசு என்று சொல்லிக்கொள்ள திமுகவுக்கு கூச்சமாக இல்லையா?
என்னை சினிமா டயலாக் பேசுகிறேன் என்று சொல்லும் தமிழக முதல்வர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் என் கேரக்டரை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க என்று பேசியிருக்கிறார். இது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்து பேசிய வசனமா? பெண்கள் பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கில் நாடே சந்தி சிரிக்கிறதே? அதுதான் உங்க கேரக்டர் என்று நாங்கள் புரிஞ்சுக்கலாமா?
புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் ஜெயலலிதா மேடமும் திமுகவை மிக கடுமையான ஒரே வார்த்தையில் சொல்லி விட்டனர். அவர்கள் சொன்னதையே இப்போது நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூய சக்தி. வருகிற சட்டசபை தேர்தலில் தவெக என்கிற தூய சக்திக்கும் திமுக என்கிற தீய சக்திக்கும்தான் போட்டியே.
நான் காஞ்சிபுரத்தில் சொன்ன என்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் தப்பு தப்பாக திரித்து பேசி வருகின்றனர். என்னை பற்றியும் தவறாக பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு அல்ல, அதைவிடவும் மோசமாக பேச எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட அரசியல் வேண்டாம் என்று பார்க்கிறேன். ஏனென்றால் நான் நாகரிகமாக அரசியல் செய்ய விரும்புகிறேன் என்று நடிகர் விஜய் அந்த கூட்டத்தில் பேசினார். கூட்டத்தின் முடிவில் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்க்கு நினைவுப்பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கினார்.





