கோலிவுட்டில் பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம் சண்டக்கோழி பையா அஞ்சான் ரன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பேனரில் தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் இணைந்து பல படங்களை லிங்குசாமி தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமி படம் தயாரிப்பதற்காக 35 லட்சம் ரூபாய் கடனாக வட்டிக்கு வாங்கியிருக்கிறார். இந்த கடனை அவர் குறிப்பிட்ட நாட்களில் வட்டியுடன் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த தனியார் நிறுவனத்திற்கு லிங்குசாமி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொடுத்த செக் வங்கியில் பணம் இன்றி திரும்பி வந்துள்ளது.
இதையடுத்து தங்களுக்கு தயாரிப்பாளர் லிங்குசாமி தர வேண்டிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.48.68 லட்சம் தர வேண்டும் என்று அந்த தனியார் நிறுவனம் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவன இயக்குனர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அவர்கள் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது.
மேலும் கடனாக பெற்ற தொகையை 2 மாதங்களுக்குள் அவர்கள் திருப்பி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் இயக்குனராக தயாரிப்பாளராக ஒரு முக்கிய நபராக இருப்பவர் என்பது குறிப்பிடத்கக்து.
இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காசோலை வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளது. நாங்கள் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை சிலர் கூறி வருகிறார்கள். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று இயக்குனர் லிங்குசாமி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.





