இப்போதெல்லாம் ரசிகர்களை நம்பி படம் எடுப்பதை விட பல தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்கள், சாட்டிலைட் நிறுவனங்களை நம்பிதான் படம் எடுக்க வருகின்றனர். அதற்கு காரணம் அவர்களது முதலீட்டில் பெரும்பகுதியை அள்ளித் தருவது சாட்டிலைட் நிறுவனங்களும் ஓடிடி நிறுவனங்களும்தான்.
ஆனால் அதுவும் சமீபகாலமாக மாறிப்போய் விட்டது. முன்பெல்லாம் சின்ன சின்ன படங்களுக்கு கூட பல கோடி ரூபாய் டிஜிட்டல் ரைட்ஸ் விலையாக கொடுத்த ஓடிடி நிறுவனங்கள் இப்போது விலையை வெகுவாக குறைத்து விட்டன. முன்பு போல படங்களை வாங்கவும் அதிக விலை கொடுக்கவும் ஓடிடி நிறுவனங்கள் முன்வருவது இல்லை.
இந்த சூழ்நிலையில் நடிகர் சூரி நடித்து வரும் மண்டாடி படத்தை டிஜிட்டல் உரிமம் வாங்க சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இப்போது மண்டாடி என்ற படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வருகிறார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள கடல் மற்றும் கடலோர பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி என்பவர் டைரக்ட் செய்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ் நடிகை மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். விடுதலை கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களை தொடர்ந்து நடிகர் சூரி மண்டாடி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக ஓடிடி நிறுவனங்கள் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களை டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கவே ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்கள் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆகாமல், ரிலீஸ் செய்யாமல் பல மாதங்களாக கிடப்பில் உள்ளன.
ஆனால் நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க அமேசான் பிரைம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ டிவி போன்ற ஓடிடி தளங்கள் கடுமையாக போட்டி போடுகின்றன. இந்த கடும் போட்டியில் ஜீ டிவி மண்டாடி படத்தின் ஓடிடி ரைட்ஸ் வாங்கிவிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் நடித்த படங்களையே டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க ஓடிடி நிறுவனங்கள் கண்டுகொள்ளாத நிலையில், சூரியின் மண்டாடி படத்துக்கு பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது.





