அமெரிக்கா வாழ் தமிழ்பெண்ணாக இருப்பவர் சிந்தியா. இவரது பூர்வீகம் கோயம்புத்தூர் என்று சொல்லப்படுகிறது. சிந்தியா சொந்தமாக தயாரித்து அவரே நாயகியாக நடித்துள்ள படம் அனலி. இந்த படத்தை இயக்குனர் தினேஷ் தினா இயக்கி உள்ளார். அனலி படம் வருகிற ஜனவரி 2ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சென்னையில் நடந்த அனலி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகை சிந்தியா கூறியதாவது, இது நான் தயாரித்து நடிக்கும் 3வது படம். இந்த 3 படங்களிலும் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. நானே சொந்தமாக சம்பாதித்த பணத்தில் இந்த படங்களில் முதலீடு செய்கிறேன்.
எங்கே தவற விட்டாலும் அங்கே தான் தேட வேண்டும் என்று சினிமாத்துறையில் மீண்டும் படங்களை தயாரிக்கிறேன். இதற்கு முன்பு தினசரி என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். தினசரி படத்துக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. அனலி படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.
மற்ற பெரிய ஹீரோக்கள் நடிக்க தயங்கும் சண்டைக் காட்சிகளில் நான் மிகவும் துணிச்சலாக நடித்திருக்கிறேன். நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி போன்ற படங்களுடன் அனலி படமும் மோதுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. நடிகர் விஜயை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. அதில் விஜய் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார். அதனால் அடுத்த ஆண்டில் நவம்பருக்கு பிறகு மீண்டும் அவர் நடிக்க வருவார். அடுத்த 2 ஆண்டுகளில் நான் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று நம்புகிறேன். அடுத்து ஜீவி பிரகாஷ்குமார் இசையில் ஒரு படம் தயாரிக்கவும் ஆசைப்படுகிறேன்.
நான் பெண்ணாக இருப்பதால் நிறைய அவமானங்கள், ட்ரோல்களை சந்திக்கிறேன். ஆனாலும் அதையும் மீறி ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. எனது முன்னோர்கள் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் வளர்ந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் பார்த்து தமிழ் படித்து தமிழ் சினிமா தயாரித்து நான் நடிக்கிறேன். அனலி படத்தில் இயக்குனர் பி வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்திருக்கிறார் என்றும் அனலி பட நாயகி மற்றும் தயாரிப்பாளர் சிந்தியா கூறியிருக்கிறார்.





