ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சித்தார்த். பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் 5 பேரில் ஒரு நாயகனாக அவர் நடித்து அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.
தொடர்ந்து ஆய்த எழுத்து உதயம் என்எச் 4 காதலில் சொதப்புவது எப்படி என பல படங்களில் சித்தார்த் நடித்தார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. இடையிடையே அரசியல் சமூகம் சார்ந்த சில வலைதள பதிவுகளை செய்து சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை நடிகர் சித்தார்த் சொந்தமாக தயாரித்து இருந்தார்.
அதன்பிறகு சித்தார்த் நடித்த இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்கள் எதுவும் சரியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் சித்தார்த் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ரவுடி அண்ட் கோ என்ற வித்யாசமான அதே நேரத்தில் கவரும் விதமான ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் உருவாகி உள்ளது. ரவுடி அண்ட் கோ என்ற கார்பரேட் நிறுவனத்தில் ரவுடிகளை பணியில் அமர்த்தி அங்கு வேலை பார்க்குமாறு சொல்கின்றனர். அங்கு பணியில் சேர போலீஸில் குற்ற வழக்குகள் அவர்கள் மீது இருக்க வேண்டும்.
அதாவது எப்ஐஆர் பதிவான குற்றவாளிகள் குறிப்பாக ரவுடிகளாக இருந்தால்தான் மட்டும்தான் ரவுடி அண்ட் கோ நிறுவனத்தில் வேலை பார்க்க முடியும் என்ற வித்யாசமான காமெடி கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் 3 நிமிட பிரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த்துக்கு இந்த படம் கம்பேக் படமாக அமையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சித்தார்த்துடன் நடிகர் யோகிபாபுவும் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





