நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்த படத்துக்கு சான்றிதழ் தராமல் சென்சார் போர்டு இழுத்தடித்த நிலையில் படத்தை தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் இப்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று மதியம் இந்த அவசர வழக்கை மீண்டும் விசாரிக்க இருக்கிறார். சென்சார் போர்டு தரப்பில் மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை அனுப்பியதாக சொன்ன நிலையில் அதுகுறித்து இன்று ஆவணங்களுடன் விளக்கம் தர நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அதனால் இந்த விவகாரம் என்ன தீர்ப்பு வரும் என்ற பரபரப்பான நிலையில் உள்ளது.
இதற்கிடையே இன்னொரு பிரச்னையும் இப்போது எழுந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் ஜனநாயகன் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர். ஏற்கனவே பலத்த நஷ்டத்தில் சுமாரான லாபத்தில் பல தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில் வினியோகஸ்தர்களின் கிடுக்கிப்பிடி நிபந்தனையால் இந்த புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, பராசக்தி படத்தை விட ஜனநாயகன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு வசூலில் 75 முதல் 80 சதவீதம் வரை வினியோகஸ்தர்கள் ஷேர் கேட்பதால் தான் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் நாங்கள் 70 சதவீதம் வரை ஷேர் தர தயாராக இருக்கிறோம். இதனால்தான் தியேட்டர்களில் ஜனநாயகன் புக்கிங் தாமதமாகிறது. இதற்கு வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. எந்தவிதமான அழுத்தமும் எங்களுக்கு இல்லை. விஜயிடம் இதைப் பற்றி நானே பேசி இருக்கிறேன். அதுதான் இப்போது ஜனநாயகன் படத்துக்கு தியேட்டர்கள் இல்லை என்ற பிரச்னையை கிளப்பியுள்ளது.
சல்லியர்கள் படம் ரிலீஸ் பிரச்னை புற்றி முதலில் தெரிந்திருந்தால் அந்த படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்திருப்போம். வரும் காலங்களில் இது போன்று நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தியேட்டர் உரிமையாளர்களும் உண்மையில் தமிழ் உணர்வு மிக்கவர்கள்தான். சில தவறுகள் நடந்தால் அதை தெரிவித்தால் கண்டிப்பாக திருத்திக் கொள்வோம். அது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று திருப்பூர் சுப்ரமணியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





