தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம் தளபதி. கடந்த 1991ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் – மம்முட்டி நடிப்பில் வெளியான இந்த படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த படமாக உள்ளது. நட்புக்கு இலக்கணமாக இந்த படம் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
தளபதி படத்தில் தாதாவாக இருக்கும் மம்முட்டி தனக்கு தொடர்ந்து இடையூறு செய்யும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என்று தனது உயிர் நண்பன் ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்முட்டி இப்படி சொல்வதற்கு முன்புதான் ரஜினி தனது தாயை சந்தித்து அரவிந்த்சாமி தன்னுடைய சொந்தத் தம்பி என்பதை அறிந்துக்கொண்டு வந்திருப்பார்.
எனவே மம்முட்டி அப்படி சொல்லும்போது என்னால் தம்பியை கொலை செய்ய முடியாது என்று ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி. என் உயிரை எடுத்துக்கோ. நான் உன் உயிர் நண்பன். ஆனால் அவனை கொல்ல முடியாது என்பார். நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என்று ரஜினியுடன் அரவிந்த்சாமியை பார்க்க இருவரும் போக வில்லன் அப்போது வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மம்முட்டி, ரஜினியின் கண் முன்னே உயிர் இழப்பார் இதுதான் தளபதி படத்தின் கதையாக இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, தளபதி படத்தை பார்க்கும் போது என்னுடைய மனதில் ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி அவனை கொல்ல முடியாது என ரஜினி சொல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பதில் விழுந்து விடுகிறது. மம்முட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.
ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மம்முட்டியிடம் சொல்ல மம்முட்டி தனது நண்பன் தனக்காக சொந்த தம்பியையே கொல்ல சென்று இருக்கிறான் என்று நெகிழ வேண்டும். ரஜினியை தடுக்க மம்முட்டி கிளம்ப வேண்டும். மம்முட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்தசாமியை கொன்று விடுவாரா அல்லது மம்முட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் வந்து தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்ப்பவர்களிடையே ஏற்படும்.
இதை ஏன் மணிரத்னம் யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸ்சை ரஜினியிடம் சொன்னேன். அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக் கொண்டு, எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கேரக்டர் அந்த இடத்தில் சட்டென விழுந்து விட்டது என்று தோன்றியது. அதனால் ரஜினியிடம் நான் இதைச் சொன்னேன் என்று இயக்குனர் கே பாக்யராஜ் அதில் கூறியிருக்கிறார்.





