நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி 9 என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கால தாமதத்தால் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியது.
இதனால் பாதிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் இன்று காலை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிடி ஆஷா, உடனடியாக ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் தரப்பில், மேல் முறையீடு செய்தது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடியாது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதால் படத்தை மறு ஆய்வு செய்ய 4 வாரங்கள் வரை கால அவகாசம் தேவை என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் சென்சார் போர்டு மேல் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தனி நீதிபதி பிடி ஆஷா பிறப்பித்த உத்தரவை செய்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
எப்படியும் ஜனவரி 15ம் தேதிக்குள் ஜனநாயகன் படம் திரைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஜனவரி 21ம் தேதி தான் இதுகுறித்த விசாரணையே நடத்தப்பட உள்ளதால் கண்டிப்பாக இந்த முறை ஜனநாயகன் பொங்கலுக்கு இல்லை என்பது உறுதியாகி விட்டது. இதற்கிடையே இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஜனநாயகன் படத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக திமுக மீது தளபதி ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் போர்டு வாயிலாக விஜய் படத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தனது கொள்கை எதிரியாக பாஜகவை பேசிய விஜய்க்கு தக்க நேரத்தில் பாஜக அரசு பதிலடி தந்துவிட்டது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.





