வணிக நோக்கத்துக்காக பிரபலங்களை சில நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்கின்றன. அவர்களது அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பெயர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். முறையாக அவர்களின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இப்படி முறைகேடாக பிரபலங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது சட்ட விதிமீறலாக பார்க்கப்படுகிறது.
அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நடிகைகளின் பெயரை புகைப்படங்களை பயன்படுத்தி சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் விஜயின் பெயரைக் கூறி சிறுவன் ஒருவர் மோசடியில் ஈடுபட்டது இணையத்தில் வைரலானது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா தொடங்கி நடிகர்கள் அபிஷேக் பச்சன் அமிதாப் பச்சன் சல்மான்கான் நடிகர் மாதவன் என பல பிரபலங்கள் இப்படிப்பட்ட வணிக ரீதியான முறையில் பயன்படுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அந்த வரிசையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பியான நடிகர் கமல்ஹாசனும் உரிமையியல் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது பெயர் புகைப்படம் தனது குரல் மற்றும் உலக நாயகன் என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
நீயே விடை என்கிற ஒரு நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும் வசனங்களையும் டீ சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி இதுகுறித்து உரிமையியல் வழக்கு ஒன்றை கமல்ஹாசன் தொடர்ந்து உள்ளார். சிறு வயதிலிருந்தே திரையுலகில் நான் இருந்து வருகிறேன்.
பல்வேறு கலை வடிவங்களில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் பெயர் புகைப்படங்கள் அனுமதியின்றி வணிகரீதியாக பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.





