ஒரு நல்ல கலைஞர் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவரது அடையாளம் வெகு விரைவில் மக்களிடம் சென்று சேர்ந்து விடுகிறது. அப்படிதான் நடிகர் சூரி பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார். அப்படி சில காட்சிகளில் வந்த நடிகர்கள் ஒரு கட்டத்தில் நட்சத்திர நடிகர்களாக மாறி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் கவனம் பெற்ற ஒரு நல்ல கலைஞர் நடிகர் ஜென்சன் திவாகர். ஆரம்பத்தில் கோவையை சேர்ந்த நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் இளைஞர்கள் பலர் நடித்த காமெடி வீடியோக்களில் ஜென்சன் திவாகர் காணப்பட்டார். அப்போதே அவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது.
இந்த நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர்தான் கடந்தாண்டில் வெளியான குடும்பஸ்தன் படத்தின் இயக்குனர் ராஜேஷ்வர் காளிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலும் ஜென்சன் திவாகர் நடித்திருந்தார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மதுபாட்டில் மூடியை விழுங்கிவிட்டு அவர் செய்யும் அலப்பறை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
நடிகர் ஜென்சன் திவாகருக்கு நல்ல அடையாளத்தை தந்த படம் லப்பர் பந்து. இதில் அட்டக்கத்தி தினேஷின் குடிகார நண்பராக நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் பேசும் டயலாக் எல்லாம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து குடும்பஸ்தன் பிறகு ஆண் பாவம் பொல்லாதது இப்போது தலைவர் தம்பி தலைமையில் என அவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஜென்சன் திவாகர் கூறியதாவது, நான் நடிக்கிற படமெல்லாம் ஹிட் ஆகிறது. அதனால் நான் தொட்டதெல்லாம் பொன் ஆகும் என்று சொல்ல முடியாது. ஒரு நல்ல படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்கிறேன். எனக்கு அதிர்ஷ்டம் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது.
ஒரு வேலையை செய்கிறோம். அது மக்களுக்கு பிடித்து போய்விடுகிறது. அப்படி எல்லா படமும் ஹிட் ஆகிறது. அதனால் அதிர்ஷ்டம் என்கிற விஷயத்துக்குள் வராமல் அந்த படங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன் என்பதே எனக்கு பெரிய சந்தோஷம்தான் என்று அந்த நேர்காணலில் நடிகர் ஜென்சன் திவாகர் கூறியிருக்கிறார்.





