நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்து வருகிறார்.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்கிறார். தலைவர் 173 என இந்த படத்துக்கு தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்கள் பெரிய தோல்வியை சந்திக்கின்றன. குறிப்பாக கடந்தாண்டில் வெளியான பல ஆக்சன் படங்கள் படுதோல்வி படங்களாக இருந்தன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த கூலி கமல் நடித்த தக்லைஃப் சூர்யா நடித்த ரெட்ரோ என பல படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
அதே நேரத்தில் குடும்ப கதை பின்னணியில் உருவான படங்கள் சத்தமே இல்லாமல் பெரிய வெற்றியை பெறுகின்றன. பிரமாண்ட பட்ஜெட் ஸ்டார் நடிகர்கள் ஸ்டார் இயக்குனர் ஸ்டார் இசையமைப்பாளர் என இந்த விஷயங்களை கடந்து சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சம் இருந்தால் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் குடும்பஸ்தன் டூரிஸ்ட் ஃபேமிலி 3 பிஎச்கே மாமன் தலைவன் தலைவி சிறை போன்ற படங்கள் கடந்தாண்டில் வெளியாக மாபெரும் வரவேற்பை பெற்றன. அதனால் தலைவர் 173 படம் குடும்ப கதை பின்னணியில் பேமிலி டிராமாவாக தான் உருவாகிறது. எனக்கு இப்போது அதுபோன்ற ஒரு படம்தான் தேவை என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அதனால் தலைவர் 173 படம் முழுக்க முழுக்க குடும்ப கதை தான். ஜெயிலர் கூலி வேட்டையன் தர்பார் பேட்ட கபாலி காலா போல இல்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க ராஜா சின்ன ரோஜா படையப்பா முத்து போன்ற பேமிலி டிராமா படமாக உருவாக உள்ளது. மேலும் ரஜினியின் உடல் நலம் கருதியும் ஆக்சன் படங்களை அவர் தவிர்க்க விரும்புவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





