விஜய் டிவியில் கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் வெற்றி பெற்றார். 2ம் இடத்தில் ரன்னராக சபரிநாதனும் 3வது இடத்தில் விக்கல்ஸ் விக்ரமும் 4வது இடத்தில் அரோராவும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை பொருத்த வரை மறக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவர் விஜே பார்வதி என்றால் மற்ற ஒரு போட்டியாளரும் ரசிகர்களால் மறக்க முடியாதவர். அவர்தான் வாட்டர்மெலன் ஸ்டார் நடிப்பு அரக்கன் திவாகர். பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்த சேட்டைகளும் சட்டை அணியாமல் அவர் ஆடிய நடனங்களும் புல்வெளியில் அவர் குளித்த காட்சிகளும் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
கஜினி படத்தில் நடிகர் சூர்யா ஒரு காட்சியில் தர்பூசணி பழம் சாப்பிட்டபடி தனது ஊழியர்களை கைவிரலை அசைத்துக்காட்டி போகுமாறு சைகை செய்வார். அதையே ரீல்ஸ் ஆக செய்து காட்டி தன்னை தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்றும் நடிப்பு அரக்கன் என்றும் புகழ்ந்து கொள்ளும் திவாகர், இப்போது பிக்பாஸ் புகழ் திவாகர் என்றும் சொல்லிக்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே இவரை பற்றி நிறைய விமர்சனங்கள் உள்ள நிலையில் சமீபகாலமாக அவருக்கு 3 திருமணங்கள் நடந்து விவகாரத்து ஆனவர் என்றும் 2 மகன்கள் உள்ளனர் என்றும் அவருக்கு வயது 50க்கு மேல் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. தன்னை பற்றிய அவதூறுகள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் திவாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது திவாகர் கூறியதாவது, என்னை பற்றி நிறைய பேர் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். எனக்கு வீட்டில் அப்பா அம்மா பெண் தேடிக்கொண்டு இருக்கின்றனர். என்னுடைய பிறந்த வருடம் 1988 தான். வயது வந்து பார்த்தீங்கன்னா சிவகார்த்திகேயனுக்கு நான் இளமை. சிவகார்த்திகேயனை விட நான் இளமையானவன்.
எங்கே தமிழ் திரையுலகத்தில் இவர் பெரிய ஹீரோவாக வந்து விடுவாரோ என்கிற பயத்தில் என் மீது அபாண்ட பழிகளை சுமத்தி வருகின்றனர். இவருக்கு வயசு கூட. இவருக்கு 3 கல்யாணம் நடந்துருக்கு என்று வதந்தியை பரப்புகின்றனர். மதுரையில் தானே நீங்க இருக்கீங்க? எனக்கு கல்யாணம் நடந்திருந்தால் உங்களுக்கு தெரியாதா, நியூஸ் பரவாதா? என்று திவாகர் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் வாய்விட்டு சிரித்து ஷேர் செய்து வருகின்றனர்.





