சமீபகாலமாக இணையவழி குற்றங்கள் பெருகி விட்டன. குறிப்பாக பெண்கள் தான் இதில் அதிகளவில் குறி வைக்கப்படுகின்றனர். ஆபாச குறுந்தகவல் ஆபாச வீடியோ என்று அவர்களுக்கு அதிகளவில் அனுப்பி சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். பொதுவெளியில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு பெண்களை கொச்சைப்படுத்துகின்றனர். இது ஒரு சமூக சீரழிவாக மாறி வருகிறது.
தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக இருப்பவர் ஸ்ரீஜா ரவி. அவரது மகள் ரவீனா ரவி. இவரும் டப்பிங் கலைஞர்தான். பின்னணி குரல் கொடுப்பது மட்டுமின்றி திரைப்பட நடிகையாக உள்ளார். நடிகர் விதார்த் நாயகனாக நடித்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் வித்தாத்துக்கு ஜோடியாக மனைவியாக ரவீனா ரவி சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து விஷால் நடித்த வீரமே வாகை சூடும் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்டுடே மற்றும் பகத் பாசிலுக்கு மனைவியாக மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் ரவீனா ரவி நடித்திருக்கிறார். இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக தன்னையும் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சில மர்ம நபர்கள் இணைய வழியாக தொந்தரவு செய்வதாக ரவீனா ரவி புகார் தெரிவித்துள்ளார்.
சபரீஷ் என்ற நபரும் அவரது சகோதரர்களும் தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆன்லைனில் துன்புறுத்தி வருகிறார்கள். அருவருப்பான குறுஞ்செய்திகளை எங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள். இது எங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தும் அவர்கள் தொந்தரவு இன்னும் குறையவில்லை.
மீண்டும் மீண்டும் புதிய சமூக வலைதள கணக்குகள் தொடங்கி எங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல் வந்தாலும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அந்த கணக்குகளை பிளாக் செய்து அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை நான் வெளியிட்டுள்ளேன்.
சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று சொல்லப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரவீனா ரவி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீஸூக்கும் இந்த புகாரை டேக் செய்துள்ளார். இப்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





