ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது ஹீரோ டைரக்டர் புரடியூசர் சார்ந்தது மட்டுமல்ல… அந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் பல பேரின் உழைப்பும் திறமையும் மெனக்கெடலும் பங்களிப்பும் இருக்கிறது. ஆனால் எப்போதுமே இயக்குனர் டைரக்டர் கொண்டாடப்படுவது போல படத்தின் வெற்றிக்கு உழைத்த மற்றவர்கள் கொண்டாடப்படுவது இல்லை.
சில வெற்றிப் படங்களை உருவாக்கி ரசிகர்களுக்கு தரும்போது அந்த படத்தின் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விழா நடத்தி விருது வழங்கி கௌரவிப்பது வழக்கமாக உள்ளது. தோல்வி படங்களுக்கு கூட இப்போது சக்சஸ் மீட் நடத்தி காமெடி செய்வது கோலிவுட்டில் ஒரு தனிக்கதையாக உள்ளது.
ஆனால் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி அவர் தயாரித்த முதல் படம் தலைவர் தம்பி தலைமையில். நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தியேட்டர்காரர்களுக்கும் தடபுடல் விருந்து தர தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி பொங்கலுக்கு வெளியான டிடிடி படம் பெரிய வெற்றியை பெற்றது. இதற்காக தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சக்சஸ் மீட் நடத்தி படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் விருது தந்து பாராட்டி கௌரவித்தார்.
தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் 25வது நாளில் சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பட்டு வேட்டி- சட்டை, பட்டு புடவை என ரூ. 3 ஆயிரம் மதிப்பில் ரூ. 15 லட்சம் வரை பரிசாக வழங்கினார். இப்போது டிடிடி படத்தின் பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.
இப்போதும் அவர் தயாரிப்பில் உருவான தலைவர் தம்பி தலைமையில் படம் தமிழ்நாட்டில் 141 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் தெரிய வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான அனைத்து தியேட்டர் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இந்த தடபுடல் விருந்து விரைவில் அளிக்கப்படுகிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு செயலை செய்து கண்ணன் ரவி பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிட்டார்.





